• May 20, 2024

ஓய்வூதியம் கிடைக்காததால் பிச்சை எடுக்கும் அரசு அதிகாரி; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

 ஓய்வூதியம் கிடைக்காததால் பிச்சை எடுக்கும் அரசு அதிகாரி; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

மதுரை புறநகர் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் கோபால் என்ற முதியவர், யாசகம் பெற்று வந்தார். அவ்வப்போது அவர், சிலரிடம் சொந்த வாழ்க்கையில் நடந்த சோகங்களைப்பற்றி கூறியுள்ளார். அதாவது, அவர் அரசுத்துறையில் பணியாற்றியதாகவும், ஓய்வு பெற்ற பின்னர் தனக்கு சேர வேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் கிடைக்காததால் ஏற்பட்ட வறுமையால் கோவில், கோவிலாக சென்று பிச்சை எடுத்து வாழ்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.
இதையறிந்த பக்தர் ஒருவர், தனது நண்பரான வக்கீல் ஜின்னா என்பவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து கோபால் சார்பில் வக்கீல் ஜின்னா, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் எனது குடும்பத்தினர் வசிக்கின்றனர். நான் வேளாண் உதவி அதிகாரியாக பணியாற்றி 2006-ம் ஆண்டில் ஓய்வு பெற்றேன். அப்போது கூட்டுறவு சங்கத்தில் எனது கடன் நிலுவையில் இருந்ததால், எனக்கு ஓய்வூதியம், பணப்பலன்களை வழங்கவில்லை. இதனால் எனது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. இதனால் படிப்பை தொடர முடியாமல் எனது மகன் தற்கொலை செய்து கொண்டார். எனது 2 மகள்களுக்கும் 40 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் ஆகாமல் கூலி வேலைக்கு செல்கிறார்கள். விரக்தி அடைந்த நான், வீட்டை விட்டு வெளியேறி கோவில்களில் பிச்சை எடுத்து பிழைக்கிறேன். எனவே எனது குடும்ப சூழ்நிலை கருதி, எனக்கு சேர வேண்டிய பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் 74 வயதுடையவர். இவர் பல்வேறு துயரங்களை சந்தித்துள்ளார். மனுதாரர் கோபால், தஞ்சை மாவட்ட வேளாண்மை உதவி அலுவலர்கள் கூட்டுறவு சேமிப்பு சங்கத்தில் கடன் பெற்றுள்ளார். கடன் தொகை சரியான நேரத்தில் செலுத்தாததால், கடன் நிலுவைத் தொகை ரூ.5,37,730 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்த தொகையை செலுத்திவிடுவதாக தெரிவித்துள்ளார். 6 வாரத்தில் ஓய்வூதியம் தமிழ்நாடு ஓய்வூதிய விதி 61-ன்படி ஓய்வூதியத் திட்டத்தைத் தயாரித்து அதை இறுதி செய்வது உரிய அதிகாரியின் கடமை. எனவே மனுதாரருக்கு சேர வேண்டிய ஓய்வூதியத்தொகையில் கடன் தொகையை கழித்துவிட்டு, மீத தொகையை உரிய வட்டியுடன் 6 வாரத்தில் அதிகாரிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *