• May 20, 2024

கோவில்பட்டி ரெயில்நிலையத்தில் பேட்டரி கார், நகரும் படிக்கட்டு, 2-வது பிளாட்பாரத்தில் முழுமையான நிழற்கூரை ; த.மா.கா. கோரிக்கை

 கோவில்பட்டி ரெயில்நிலையத்தில் பேட்டரி கார், நகரும் படிக்கட்டு, 2-வது பிளாட்பாரத்தில் முழுமையான நிழற்கூரை ; த.மா.கா. கோரிக்கை

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் 2-வது நடைமேடையில் முழுமையாக மேற்கூரை இன்னும் அமைக்கப்படாமல் இருப்பதை காணலாம்

கோவில்பட்டி நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜகோபால். செயலாளர் மூர்த்தி, ஆகியோர் தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி இருக்கிறார்கள். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

கோவில்பட்டி ரெயில்நிலையம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான வழித்தடத்தில் அமைந்துள்ள முக்கியமான ரெயில்நிலையம் ஆகும். மதுரை கோட்டத்தில் மதுரை, திருநெல்வேலிக்கு அடுத்து அதிகமாக வருவாய் ஈட்டித்தரும் ரெயில்நிலையமாக கோவில்பட்டி ரெயில்நிலையம் விளங்குகிறது.

தற்போது 2-வது இருப்புப்பாதை அமைத்த பின்னர் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்று பொதுமக்களும், வியாபாரிகளும் நினைத்தனர். ஆனால் கொரோனாவுக்கு முன் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று சென்ற சென்னை எக்மோர்-கன்னியாகுமரி விரைவு ரெயில் (எண்12633) தற்போது நின்று செல்வது இல்லை.

கொரோனா காலம் முடிந்து அனைத்தும் இயல்புக்கு வந்த நிலையில் சென்னை செல்லும்போது கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் கன்னியாகுமரி விரைவு ரெயில் , மீண்டும் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் போது கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்வது வினோதமான நடவடிக்கையாகும்.

இதனால் இந்த ரெயிலில் வரும் கோவில்பட்டி பயணிகள் சாத்தூர் அல்லது திருநெல்வேலியில் இறங்கி பஸ் அல்லது கார்களில் கோவில்பட்டி வரும் நிலை தொடருகிறது,. பயணிகளின் இந்த சிரமத்தை களைய சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் 12633 என்ற எண் கொண்ட விரைவு ரெயில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல் மற்றும் 2-வது நடைமேடையை இணைக்கும் நடை மேம்பாலம்

மேலும் கொரோனா காலத்தில் இருந்து சிறப்பு ரெயிலாக நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கும்(17236), பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு(17235) இயக்கப்பட்டு வருகிறது, இதில் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ரெயில் (17236) மிகவும் தாமதமாகவே ஓசூர் மற்றும் அதனை அடுத்து வரும் ரெயில் நிலையங்களுக்கு செல்கிறது,. இதனால் இந்த் ரெயிலில் பயணிக்கும் அரசு ஊழியர்களும், தொழிலாளர்களும் சரியான நேரத்துக்கு வேலைக்கு செல்லமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
கொரோனா காலத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் இந்த ரெயிலுக்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. இந்த ரெயில் சென்னை மார்க்கமாக செல்லும் ரெயில்களுக்கு இணையாக முன்பதிவு முடிந்துவிடுகிறது. எனவே இந்த ரெயிலை சிறப்பு ரெயில் என்ற அந்தஸ்தில் இருந்து நீக்கி வழக்கமான ரெயிலாக இயக்க வேண்டும்.

2-வது இருப்புபாதை அமைக்கப்பட்ட பின்னர் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் 2-வது நடைமேடை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நடைமேடையில் மேற்கூரை முழுவதுமாக அமைக்கபப்டாமல் ஆங்காங்கே சிறிய அளவிலான முற்கூரையுடன் கூடிய செட் அமைக்கப்பட்டுள்ளது.
இதானால் பயணிகள் மழை மற்றும் வெயில் காலத்தில் மிகவும் சிரமத்தை சந்திக்கின்றனர், எனவே 2-வது நடைமேடையில் முழுவதுமாக மேற்கூரை அமைக்க வேண்டும். குடிதண்ணீர் வசதி செய்து தரவேண்டும்.
முதல் மற்றும் 2-வது நடைமேடைகளில் முதியோர், மாற்றுதிறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில் பேட்டரி கார் இயக்க வேண்டும். முதலாவது நடைமேடையில் இருந்து 2-வது நடைமேடைக்கு செல்ல மின்தூக்கி(லிப்ட்)அல்லது நகரும் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் 5-ம தேதி நள்ளிரவு நடைபெறுகிறது. திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் எனவே இதை கருத்தில் கொண்டு சென்னை, கோவையில் இருந்து .திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். அதிலும் முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயிலாக இயக்கினால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பயணிகளுக்கு மிகவும் பயன் அளிக்கும். எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *