• May 19, 2024

கோவில்பட்டி மக்களுக்கு நற்செய்தி…!அனைத்து பஸ்களும் கூடுதல் பஸ் நிலையத்துக்குள் சென்று திரும்ப நடவடிக்கை

 கோவில்பட்டி மக்களுக்கு  நற்செய்தி…!அனைத்து பஸ்களும்  கூடுதல் பஸ் நிலையத்துக்குள் சென்று திரும்ப நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் முக்கியமான நகரம் கோவில்பட்டி. தீப்பெட்டி, மில், கடலைமிட்டாய் தயாரிப்பு மற்றும் விவசாயம் என தொழில் சார்ந்த நகரம் என்பதால் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கோவில்பட்டி நகரை நோக்கி வருகிறார்கள். இதனால் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.
நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் கோவில்பட்டி நகர்பகுதியில் அண்ணா பஸ் நிலையம் செயல்பட்டு வந்தாலும், நகராட்சி சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் 3.97 ஏக்கர் பரப்பளவில் 1 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.
இந்த கூடுதல் பஸ் நிலையம் கடந்த 2007ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கூடுதல் பஸ் நிலையத்தில் பஸ் இயக்கப்பட்ட சில மாதங்களில் நிறுத்தப்பட்டது.
பின்னர் வழக்கம் போல அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து தான் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கூடுதல் பஸ் நிலையம் செயல்பட நீதிமன்றத்தில் வழக்கு உள்ளிட்ட காரணங்களினால் பஸ் நிலையம் செயல்படாமல் இருந்தது. இடையில் அண்ணா பஸ் நிலையம் பராமரிப்பு காரணமாக சுமார் 20 மாதங்கள் கூடுதல் பேருந்து பஸ் இருந்து அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன. அதன் பின்னர் கூடுதல் பஸ் நிலையம் கண்டுகொள்ளப்படவில்லை.
14 ஆண்டுகளாக வெறும் காட்சி பொருளாக காட்சியளித்து வருவது மட்டுமின்றி நாளடைவில் திறந்த வெளி மதுபானக்கூடமாக மாறியது.
மேலும் பஸ் நிலையத்தில் ஆங்காங்கே சுவர்களும், மேற்கூரைகளும் பெயர்ந்து விழுந்தபடி இருந்தது.
தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம் இருந்தாலும், அந்த வழியாக செல்லக்கூடிய அரசு, தனியார் பஸ்கள் எதுவும் கூடுதல் பஸ் நிலையத்திற்கு வருவதில்லை, பஸ் நிலையத்திற்கு வெளியே சர்வீஸ் ரோட்டில் இறக்கி விட்டு செல்கின்றனர். சில அரசு விரைவு பஸ்கள், ஆம்னி பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையில் மையப்பகுதியில் இறக்கி விட்டு செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
மேலும் பயணிகள் தங்களது உடமைகளுடன் நீண்ட தொலைவிற்கு சென்று பின்னர் சர்வீஸ் ரோட்டை பிடித்து தான் கூடுதல் பஸ் நிலையத்திற்கு வரவேண்டிய நிலை உள்ளது. சிலர் தடுப்பு கம்பியை ஆபத்தான வகையில் தாண்டி கடக்கிறார்கள்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை என முக்கிய நகரங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள், பைபாஸ் ரைடர்கள், தனியார் ஆம்னி பஸ்கள் அனைத்தும் கோவில்பட்டி நகருக்குள்ள வரமால் தேசிய நெடுஞ்சாலையில் செல்வதால் பயணிகள் கூடுதல் பஸ் நிலையம் எதிரே வெயிலும், மழையிலும் வெகு நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மேலும் கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு சர்வீஸ் பஸ் கள் இயக்கபடாத காரணத்தினால் பயணிகள் ஆட்டோவை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு கலெக்டர் செந்தில்ராஜ் கூடுதல் பஸ் நிலையத்தை ஆய்வு செய்து விரைவில் பஸ் நிலையம் செயல்பட தொடங்கும் என்று அறிவித்தார். அதன்பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்ப்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன,
நாகா்கோவில்- திருநெல்வேலி- மதுரை மார்க்கமாக செல்லும் ஆம்னி உள்பட அனைத்து வகை பஸ்களும் சர்வீஸ் சாலையில் நின்று செல்லாமல் கூடுதல் பஸ் நிலையம் உள்ளே சென்று திரும்ப வேண்டும் என்றும் நாளை 31-ந்தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அறிவிப்பு கோவில்பட்டி மக்களுக்கு நற்செய்தியாக வந்து இருக்கிறது. இனிமேல் கூடுதல் பஸ் நிலையத்துக்கு வெளியே மரத்தடியை தேடிப்போய் நிற்கவோ, பாலத்தில் இருந்து சர்வீஸ் ரோட்டுக்கு தாவி குதிக்கவோ வேண்டி இருக்காது…..!

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *