கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறித்த 2 பேர் சிக்கினர்
![கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறித்த 2 பேர் சிக்கினர்](https://tn96news.com/wp-content/uploads/2022/08/download-1-11-850x560.jpg)
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் துவரந்தை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி இவர் தனது மனைவி கிருஷ்ணவேணி (24) மற்றும் 3 குழந்தைகளுடன் கடந்த 26.6.2022 அன்று இரவு இருசக்கர வாகனத்தில் புதியம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினார்.
குளத்தூர் – வேம்பார் கடற்கரை சாலை சுப்பிரமணியபுரம் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கருப்பசாமி ஓட்டி வந்த வாகனத்தை மடக்கி கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகளை பறித்து சென்று விட்டனர்.
இந்த நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) விஜயலெட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் முத்துமாரி உள்ளிட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
நேற்று தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, எப்போதும்வென்றான் பஸ் நிலையம் அருகில் சந்ததேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். எப்போதும்வென்றான் காட்டுநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த திருமலை மகன் கலைச்செல்வன் (25), மன்மதராஜ் மகன் கார்த்தி (27) என்பதும், கிருஷ்ணவேணியிடம் தங்க நகைகளை பறித்து சென்றதும் அவர்கள் தான் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 5 பவுன் தாலிச் செயின் மற்றும் 2 பவுன் தங்க செயின் என மொத்தம் ரூ.1லட்சத்து 40ஆயிரம் மதிப்புள்ள 7 பவுன் தங்க நகைகள், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கலைச்செல்வம் மீது கடம்பூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், கார்த்திக் மீது கடம்பூர், குளத்தூர் மற்றும் எப்போதும்வென்றான் ஆகிய காவல் நிலைங்களில் 4 வழக்குகளும் உள்ளன.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)