கோவில்பட்டியில், கண்கவர் விநாயகர் சிலைகள் விற்கும் வடமாநிலத்தினர்
முழு முதல் கடவுளாக விளங்குபவர் விநாயகர். கணங்களின் தலைவனாக விளங்கும் கணபதி அவதரித்த தினம் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு வருகிற 31-ந்தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடக்கூடிய ஒரு சில முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. கணபதிக்கு பிடித்த கொழுக்கட்டை, பழங்கள் உள்ளிட்ட பல பதார்த்தங்களைப் படைத்து வழிபடுவது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தி என்றாலே விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துவிடும். பொதுமக்கள் வாங்கி சென்று பூஜைகள் செய்து வழிபடுவார்கள். பின்னர் நீர் நிலைகளில் சிலையை கரைத்து விடுவார்கள்.
கோவில்பட்டியில் வடமாநில கலைஞர்கள் முகாமிட்டு கண்கவர் விநாயகர் சிலைகளை செய்து விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் வடமாநில கலைஞர்கள் கோவில்பட்டியில் வெவ்வேறு இடங்களில் பிளாட்பாரத்தில் கடைகள் அமைத்து விநாயகர் சிலைகள் விற்பனை செய்து வருகிறார்கள்.
கோவில்பட்டி மெயின்ரோட்டில் பஸ் நிலையம் அருகே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ், சுரேஷ் ஆகியோர் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களிடம் விசாரித்த போது குறைந்த பட்சமாக ரூ.35௦ விலையில் விநாயகர் சிலைகள் விற்பதாக தெரிவித்தனர், மேலும் ரூ.450,ரூ900 மற்றும் ரூ.4 ஆயிரம் விலையிலும்(2 அடி உயரம்) விநாயகர் சிலைகள் இருப்பதாக கூறினார்கள்.