• May 18, 2024

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பரிதாபம்: தவறுதலாக ஏறிய பெட்டியில் இருந்து கீழே இறங்கிய பெண் தண்டவாளத்தில் விழுந்து சாவு

 கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பரிதாபம்: தவறுதலாக ஏறிய பெட்டியில் இருந்து கீழே இறங்கிய பெண் தண்டவாளத்தில் விழுந்து சாவு

தென்மாவட்டங்களில் அதிக பயணிகள் வந்து செல்லும் ரெயில் நிலையங்களில் கோவில்பட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு 2 பிளாட்பாரங்கள் உள்ளன. பழைய பிளாட்பாரமான முதல் பிளாட்பாரத்தில் திருநெல்வேலி மார்க்கமாக செல்லவேண்டிய ரெயில்கள் வந்து செல்கின்றன.
புதிதாக அமைக்கப்பட்ட இரண்டாவது பிளாட்பாரத்தில் விருதுநகர் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்த பிளாட்பாரத்தில் போதுமான வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை. தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது.
மிக முக்கியமாக நிழற்குடைகள், பயணிகள் அமரக்கூடிய இருக்கைகள் கிடையாது. ரெயில் வரும்போது எந்த நம்பர் பெட்டி எந்த இடத்தில் நிற்கும் என்று தெரியாமல் பயணிகள் தவிப்பதை பார்க்கும்போது ரெயில் பயணமே வெறுப்பாக தோன்றும்.

இந்த நிலையில் நேற்று விளாத்திகுளம் அருகே உள்ள ஓ.லட்சுமிநாராணபுரம் கிராமத்தை சேர்ந்த லிங்கசாமி மனைவி பேபிசாந்தி (வயது 52) என்பவர் செங்கல்பட்டு செல்வதற்காக நேற்று காலை கோவில்பட்டி ரெயில் நிலையம் வந்து இரண்டாவது பிளாட்பாரத்தில் காத்திருந்தார்.
இரண்டாவது பிளாட்பாரம் வந்த நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறுவதற்கு பதிலாக முன்பதிவு பெட்டியில் தவறுதலாக பேபி சாந்தி ஏறிவிட்டார். உடனடியாக அவர் பதறிப்போய் கீழே இறங்க முயற்சித்தார். அப்போது நிலைதடுமாறிய பேபிசாந்தி ரெயில் தண்டவாளத்தில் தவறி விழுந்தார். அப்போது ரெயில் புறப்பட்டு விட்டது. இதனால் ரெயில் சக்கரங்கள் ஏறியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த காட்சியை பார்த்தவர்கள் பதறிபோனார்கள்.
ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் மற்றும் போலீசார், பேபிசாந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *