கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்திரகாளியம்மன், காளியம்மன் கோவில் ஆடிப்பொங்கல் திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு சொந்தமான அன்னை பத்திரகாளியம்மன், காளியம்மன் திருக்கோவில் ஆடிப்பொங்கல் திருவிழா இன்று (ஆகஸ்டு 1 ) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை 9 மணிக்கு உறவின் முறை தலைவர் வேல்முருகேசன் நாடார் மற்றும் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், மண்டகபடிதாரர்கள், மகளிர், இளைஞர் அணியினர், பக்தர்கள் மங்கல பொருட்களுடன் யானை முன் செல்ல வாங்கா முழங்க மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து நாக விநாயகர் கோவிலில் வழிபாடு செய்வார்கள். பின்னர் காலை 1௦.3௦ மணிக்குள் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகை அபிசேகம் நடந்தது, சிறப்பு அலங்காரத்தில் பத்திரகாளியம்மன், காளியம்மன் காட்சி அளித்தனர்,
பெண் பக்தர்கள் கொடிக்கம்பத்துக்கும், அம்மனின் வாகனமான சிங்கம் சிலைக்கும் தண்ணீர் ஊற்றி வணங்கினார்கள்.
ஆடிபொங்கல் விழா 1௦-ந் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 5 மணிக்கு நடை திறப்பு, 7.35 மணிக்கு காலை பூஜை நடைபெறும். மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது 5 மணிக்கு மாலை பூஜை நடக்கும். 6 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி உலாவிற்கு எழுந்தருளல் நடக்கும். 7.15 மணிக்கு கலையரங்க சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும், இரவு 11 மணிக்கு மேல் அம்மன் வீதி உலா நிறைவு, வைரவர் பூஜை ,நடை சாத்துதல் நடைபெறும்.
இன்று முதல் 10-ந்தேதி வரை தினமும் இரவு 7 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட யானை முன் செல்ல, முரசு ஒலிக்க , வாங்கா முழங்க, இளைஞர்கள் சிலம்பாட்டத்துடன் வான வெடிகள் அதிர , பெண் பக்தர்கள் கும்மி, கோலாட்டம் ஆட வண்ண விளக்குகள் ஒளிர விநாயகர் உற்சவர் முன் செல்ல மலர் அலங்கார சப்பரத்தில் அம்மன் பவனி நடைபெறும்.
விழா நாட்களில் தினசரி கோவில் மின்னொளி கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். இன்று (திங்கட்கிழமை) இரவு காமராஜ் நாடார் இளைஞர் நற்பணி மன்றம் மண்டபகப்படி ஆகும். இரவு 7 மணிக்கு வண்ண ஊர்தியில் சிம்ம வாகனத்தில் அம்மன் வீற்றிருந்து சூலாயுதம் ஏந்தி துர்க்கை கோலத்தில் எழுந்தருளி நகர்வலம் வருதல் நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு சிறுவர் , சிறுமியரின் கலை நிகழ்ச்சி நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் வேல்முருகேசன், துணை தலைவர் அழகுவேல் என்ற சண்முகராஜ், செயலாளர் சண்முகராஜா, துணை செயலாளர் வள்ளியப்ப ராஜ், பொருளாளர் குமார் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.