கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் வளைகாப்பு விழா
உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.
எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.
ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஆடிப்பூரம் நாளில் சிவ ஆலயங்களில் அன்னைக்கு வளைகாப்பு நடத்துவார்கள்.
ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஆடிப்பூரம் விழா அம்மன் கோவில்களில் நேற்றும் இன்றும் கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் வளைகாப்பு விழா நேற்று சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து அம்மனுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர், பெண் பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டது. அதனை பயபக்தியுடன் வாங்கி சென்றனர்.