• April 30, 2024

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வீடுகள் கட்டும் திட்டம்; கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வீடுகள் கட்டும் திட்டம்; கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி ஊராட்சியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதல் கட்டமாக வீடுகள் கட்டப்படவுள்ளன.
இந்த இடத்தினை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையெடுத்து அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தி, மாப்பிள்ளையூரணி, குளத்துள்வாய்பட்டி ஆகிய 3 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர், மறுவாழ்வு மையங்களில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மொத்தம் 350 வீடுகள் கட்டப்பட உள்ளன.
இதில் முதல் கட்டமாக 150 வீடுகளும், அதில் மாப்பிள்ளையூரணி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 52 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தாப்பாத்தி முகாமில் 52 வீடுகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது.
தாப்பாத்தி முகாமில் இடம் பிரச்சினை உள்ளது. அதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டதில் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறினார்கள். மழைக்காலத்திற்கு முன்னால் 4 மாதங்களில் வீடு கட்டும் பணிகள் முடிக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்பிக் மூலம் யூரியா, பொட்டாஷ் கிடைக்கிறது. உரங்களை எடுத்து கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும். பாசிப்பயறு, உளுந்து, சூரிய காந்தி விதைகளும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கிடைக்க தோட்டக்கலைத்துறை ஏற்பாடுகள் செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வட்டாட்சியர் முத்துராமலிங்கம், எட்டயபுரம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பொறியாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *