கோவில்பட்டி அருகே கோவில், மயானம் இடத்தை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் தர்ணா
கோவில்பட்டியை அடுத்த முடுக்கு மீண்டான்பட்டி எஸ்.டி.ஏ.சர்ச் தெருவை சேர்ந்தவர்கள் இன்று நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் கூடி திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
ஊர் நாட்டாமை லெட்சுமணன், 2-வது வார்டு உறுப்பினர் சந்தனமாரியம்மாள். புரட்சி பாரதம் மாவட்ட இளைஞர் அணி செயலளார் கலைச்செல்வன், தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது:-
முடுக்கு மீண்டான்பட்டி கிராமத்தில் எஸ்.டி.ஏ.சர்ச் தெருவில் ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்த 2௦௦ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கிழக்கே அமைந்துள்ள கல்லுடையப்பன் சுவாமி கோவிலுக்கு நாங்கள் ஆண்டுதோறும் பொங்கல் விழா அன்று அன்னதானத்துடன் கோவில் கொடை நடைபெறும்.
இந்த் கோவிலுக்கு தெற்கு பக்கம் எங்கள் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட மயானம் அமைந்துள்ளது. இந்த மயானம் முடுக்குமீண்டான்பட்டியில் எங்கள் சமுதாயம் தோன்றிய காலம் முதல் இறந்தவர்களை இங்கு தான் அடக்கம் செய்து வருகிறோம்,
நேற்று 29-ந்தேதி கல்லுடையப்பன் சுவாமி கோவில் மற்றும் மயானத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைப்பதற்கு நில கற்களை நட்டி கொண்டிருந்தார்கள். இந்த விவரம் அறிந்தவுடன் எங்களது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அங்கு சென்று கம்பி வேலி அமைப்பவர்களிடம் விசாரித்ததற்கு நில புரோக்கர் வெங்கடேசன் அமைக்க சொன்னதாக கூறினார்கள்.
நாங்கள் அந்த நில புரோக்கரை தொடர்பு கொண்டபோது அவர் நான் தூத்துக்குடியில் இருக்கிறேன், என்னால் வரமுடியாது என்று கூறி விட்டார்.
எனவே கல்லுடையப்பன் சுவாமி கோவில் மற்றும் மயான இடத்தை மீட்டு தரும்படியும் , எங்களுக்கு மன உளைச்சல் உண்டாக்கிய நில புரோக்கர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்,
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு வகிக்கும் கழுகுமலை இன்ஸ்பெக்டர் விஜயகுமார், கயத்தார் இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சு நடத்தினார்கள்.
சம்பந்தப்பட்ட நில புரோக்கரை வரவழைத்து இடத்தை அளந்து சரியான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உறுதி அளித்தனர், அதை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.