• May 16, 2024

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு; 2 பெண்கள் பலி

 குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு; 2 பெண்கள் பலி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் குற்றாலத்திற்கு வந்தபடி உள்ளனர்.
நேற்று பலத்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் இரவு 7 மணி அளவில் மெயின் அருவியில் திடீரென்று கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அருவியில் இருபகுதிகளில் குளித்துக் கொண்டு இருந்த ஆண், பெண் சுற்றுலா பயணிகளை வேகமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த வெள்ளப்பெருக்கில் எதிர்பாராத விதமாக 4 பெண்கள், ஒரு ஆண் என 5 பேர் இழுத்து செல்லப்பட்டனர்.
இதை பார்த்த அங்கு இருந்த போலீசார் மற்றும் சக சுற்றுலா பயணிகள் ஆண் நபரையும், 2 பெண்களையும் மீட்டனர். ஆனால், மற்ற 2 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.

இதுகுறித்து உடனடியாக குற்றாலம் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, வெள்ளம் செல்லும் பகுதியில் பெண்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அருவிக்கரையில் இருந்து சிறிது தூரத்தில் அந்த 2 பெண்களின் உடல்கள் மிதந்தன. உடனே தீயணைப்பு படையினர் அங்கு சென்று 2 பெண்களின் உடல்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியல் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி மல்லிகா (46), பண்ருட்டியைச் சேர்ந்த ராஜாராம் மனைவி கலாவதி (55) என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதற்கிடையே, தகவல் அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *