• May 16, 2024

கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிப்பேன்; கோவில்பட்டி புதிய டி.எஸ்.பி.வெங்கடேஷ் உறுதி

 கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிப்பேன்;  கோவில்பட்டி புதிய டி.எஸ்.பி.வெங்கடேஷ் உறுதி

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டாக(டி.எஸ்.பி.) இருந்த உதயசூரியன் கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டார். 3 மாதமாக மாற்று டி,எஸ்.பி. நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் கோவில்பட்டி டி.எஸ்.பி.யாக கி. வெங்கடேஷ் நியமிக்கப்பட்டு இன்று பதவி ஏற்றார்.
இவர் கரூர் மாவட்டம் அரவங்குறிச்சி தாலுகா பொன்னா கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பி.இ. (மெக்கானிக்கல் துறை) படித்து முடித்துவிட்டு, 2 தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். பின்னர் அரசு தேர்வு மூலம் வணிக வரித் துறையில் உதவியாளராகவும், கூட்டுறவு துறையில் சீனியர் ஆய்வாளராகவும் பணியாற்றியவர்.

அதன்பிறகு 2020இல் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி முடிந்த பின், காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் 9 மாதம் பயிற்சி பெற்று, ராஜபாளையத்தில் பொறுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்தார். இன்று கோவில்பட்டியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்றார்.
புதிய டி.எஸ்.பி.வெங்கடேஷ், நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை, திருட்டுகளை அறவே ஒழிக்க காவல் துறையோடு பொதுமக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும், பொதுமக்கள் காவல் துறையோடு நண்பர்களாக பழக வேண்டும்.

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் வயர்லெஸ் இணைப்பு முறையாக இயக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும்,

சட்டவிரோதமாக நடைபெறும் கஞ்சா, புகையிலை பொருள்கள் விற்பனையை அறவே ஒழிக்கப்படுவதுடன் இதில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், போலீசாரின் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்படும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *