ஆடி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம்- வழிபாடு
முன்னோர்களுக்குத் தர்ப்பணம், சிரார்த்தம் என பித்ரு பூஜை அமாவாசை நாட்களில் செய்வது மிகவும் விசேஷமானது. மாதந்தோறும் அமாவாசை வந்தாலும், தை, ஆடி, புரட்டாசி மாதத்தில் வரும் மாகாளய அமாவாசை சிறப்பானதாகும். மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்ய முடியாதவர்கள், கண்டிப்பாக இந்த மூன்று அமாவாசை தினங்களிலாவது பித்ரு பூஜை செய்து வழிபடுவது அவசியம்.
இந்தாண்டு ஆடி அமாவாசை திதியானது புனர்பூசம், பூசம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் இன்றைய தினம் திதி அளித்தால் 12 ஆண்டுகள் பிதுர் திருப்தி ஏற்படுத்தும் என்பது ஐதீகம்.
ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு நீர்நிலை பகுதிகளில் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள். இதன் மூலம் முன்னோர்களிடம் இருந்து ஆசீர்வாதங்களை பெறலாம் என்பது ஐதீகம்
ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்றைய தினம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். 22 தீர்த்தங்களில் நீராடி பல மணி நேரம் காத்திருந்து ராமநாதசுவாமியை வழிபட்டனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் குவிந்த ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவில் முன்பு உள்ள படித்துறையில் அதிகாலை முதலே பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு குவிந்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினார்கள். தாமிரபரணி ஆற்று படித்துறை, கல்லிடைகுறிச்சி, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பிண்டத்தை தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்தனர். இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் அங்கு போலீசார் வாகன போக்குவரத்தை சீர் செய்தனர்.
முரப்பநாடு தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏராளமனாவர்கள் காலை நேரத்திலேயே குவிந்தனர், அங்கு அவர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்,
கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் திருக்கோவில் தெப்பக்குளத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளம்னாவர்கள் காலை நேரத்தில் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்