கோவில்பட்டி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.உறுப்பினர் வெளிநடப்பு; பொதுமக்களுடன் சாலை மறியல்
கோவில்பட்டி நகராட்சி கூட்டம் தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்தது. ஆணையாளர் ராஜாராம், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் பேசுகையில், நகர்மன்ற கூட்டத்தின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட வேண்டும் என்றார்
அதற்கு பதிலளித்த தலைவர் கருணாநிதி , அடுத்து வரும் கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும் என்றார்.
பின்னர் உறுப்பினர்கள் பேசுகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கூறியதாவது:-
நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழைய வீட்டை புதுப்பித்து, அதற்கு வீட்டு தீர்வை செலுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது பழைய வீட்டுக்கும் சேர்த்து தீர்வை வசூலிக்கப்படுகிறது. இது சரியா?. ஒரு வீட்டுக்கு இரண்டு தீர்வை வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்.
சாலையோரங்களில் புதிதாக கட்டப்படும் வாறுகால், சாலையை விட உயரம் குறைவாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீரோடு அடித்து வரப்படும் மணல் வாறுகாலில் தேக்கமடையும் சூழல் உள்ளது.
எனவே, வாறுகாலின் உயரத்தை அதிகரித்து, சாலையில் ஆங்காங்கே குழாய் பதித்து, அதன் வழியாக மழைநீர் வாறுகாலில் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, 32-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் எம்.ஆர்.வி.கவியரசன், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான பணிகள் எதுவும் தீர்மானங்களில் இல்லையென கூறி வெளிநடப்பு செய்தார்.
இதை தொடர்ந்து, அவையில் வைக்கப்பட்ட 100 தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
சாலை மறியல்
கோவில்பட்டி நகராட்சி 32-வது வார்டு கவுன்சிலர் எம்.ஆர்.வி.கவியரசன் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வார்டில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும். மாணவ- மாணவிகளுக்கு உதவும் வண்ணம் நூலகம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
தகவல் அறிந்து அங்கு வந்த நகராட்சி பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்-இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 32 -வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தேவையான அத்தியாவசிய பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.