சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்; டி.ஜி.பி.யிடம் புகார்
![சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்; டி.ஜி.பி.யிடம் புகார்](https://tn96news.com/wp-content/uploads/2022/06/download-4-3.jpg)
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை சந்தித்து அவரது வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ச்சியாக சி.வி. சண்முகம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக பேசி வருகிறார். இந்த நிலையில் அவரது செல்போனுக்கு மர்ம நபர்களிடம் இருந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. மேலும் வாட்ஸப் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இதுதொடர்பாக விழுப்புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டும் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் தமிழக டி.ஜி.பி. உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட தமிழக டி.ஜி.பி. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)