‘ஒற்றை தலைமை என்ற நிலை அ.தி.மு.க.வில் இல்லை’- கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
சென்னையில் பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டங்கள் , அதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதற்கு பிரதமருக்கு நன்றி.
தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகம் குழப்பம் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது .அ.தி.மு.க. ஆட்சியில் கோவில்பட்டி 2-வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப் பட்ட போது ஒரு கோடியே 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வந்தது. ஆனால் கடந்த 10 நாட்களாக 40 முதல் 50 லட்சம் தண்ணீர் தான் வருகிறது. இது எல்லாம் நிர்வாக சீர்கேடு.
கோவில்பட்டி நகரில் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது. தற்போது குடிநீர், சாலை வசதி, மின்சாரம் பிரச்சினை என பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும் என்று பத்திரிக்கை , ஊடகங்களில் தான் செய்திகள் வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பொதுச்செயலாளர் பதவி கிடையாது, இரட்டை தலைமை தான் என்று அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எங்களை பொறுத்தவரை ஒற்றை தலைமை என்ற நிலை அ.தி.மு.க.வில் இல்லை. இரட்டை தலைமை தான்…
அ.தி.மு.க. தொடர்ந்து சிறந்த எதிர்கட்சியாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே போட்டி கிடையாது. எதிர்க்கட்சியாக நாங்கள் எங்கள் கடமை செய்கிறோம். அதே போன்று பா.ஜ.க.வினர் அவர்கள் கட்சி நிலைக்கு ஏற்ப அவர்களின் கடமையை செய்கிறார்கள். தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. உள்ளது.
இவ்வாறு கடம்பூர் ராஜூ கூறினார்.
