உப்பள தொழிலாளி வெட்டிக்கொலை; பழிக்குப்பழி சம்பவமா?
![உப்பள தொழிலாளி வெட்டிக்கொலை; பழிக்குப்பழி சம்பவமா?](https://tn96news.com/wp-content/uploads/2022/05/images-4-1.jpg)
-இல்லஸ்ட்ரேஷன்-
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவன்வடலி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 45). உப்பள தொழிலாளி. இவருடைய மனைவி முத்து சந்தனம். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். நேற்று மாலையில் சண்முகராஜ் தனது வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக, மோட்டார் சைக்கிளில் ஆத்தூருக்கு புறப்பட்டு சென்றார்.
தலைவன்வடலியை அடுத்த ஆரையூர் கல்வெட்டி பகுதியில் சென்றபோது, அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 3 மர்மநபர்கள் திடீரென்று சண்முகராஜை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சண்முகராஜை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். பின்னர் அன்கிருந்து தப்பி சென்று விட்டனர்,
பலத்த காயமடைந்த சண்முகராஜ், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவாறு கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஆத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ப
டுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சண்முகராஜை மீட்டு தங்களது காரில் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சண்முகராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த சண்முகராஜின் உறவினர்கள், கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று போலீசாரை முற்றுகையிட்டு வலியுறுத்தினர்.
அப்போது கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தலைவன்வடலிக்கு செல்லும் வழியில் கோவில் அருகில் கல்லூரி மாணவர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. எனவே மாணவர் கொலைக்கு பழிக்குப்பழியாக சண்முகராஜ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)