• April 3, 2025

கிணற்றில் மூழ்கி கோவில்பட்டி மாணவி சாவு

 கிணற்றில் மூழ்கி கோவில்பட்டி மாணவி சாவு

கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கேரளாவில் சென்டிரிங் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சண்முகத்தாய். இவர்களுக்கு தினேஷ் பாபு (வயது 20) என்ற மகனும், கிருஷ்ணபிரியா (16) என்ற மகளும் உண்டு. தினேஷ்பாபு கோவில்பட்டியில் உள்ள கல்லூரியிலும், கிருஷ்ணபிரியா தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பும் படித்து வந்தனர்.
ராஜ்குமாரின் சொந்த ஊரான கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி பஞ்சாயத்து குமாரகிரியில் நேற்று முன்தினம் கோவில் கொடை விழா நடந்தது. எனவே சண்முகத்தாய் தன்னுடைய மகன் தினேஷ் பாபு, மகள் கிருஷ்ண பிரியா ஆகியோருடன் கோவில் கொடை விழாவுக்கு சென்றார்.
நேற்று காலையில் அங்குள்ள தோட்டத்தில் கிருஷ்ண பிரியா தன்னுடைய தோழிகளுடன் குளிக்க சென்றார். அப்போது தோட்டத்தில் பம்ப்செட் அறையில் மின் மோட்டார் இயங்காததால், அங்குள்ள கிணற்றில் இறங்கி கிருஷ்ணபிரியாவின் தோழிகள் குளித்தனர். உடனே கிருஷ்ணபிரியாவும் கிணற்றில் இறங்கி குளிக்க முயன்றார்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். அவரை தோழிகள் காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் கிருஷ்ணபிரியா கிணற்றில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தோழிகள் ஓடிச்சென்று, ஊரில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர். சுமார் 45 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 35 அடி ஆழத்துக்கும் அதிகமாக தண்ணீர் இருந்ததால் அவரை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, கிருஷ்ண பிரியா உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *