பாளையங்கோட்டையில் அ.ம.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி என்ற மணி(வயது 40). இவர் பாளையங்கோட்டையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும், பழைய கார்களை உடைத்து விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார்.
கருங்குளம் ஒன்றிய அ.ம.மு.க. நிர்வாகியான இவர் பாளையங்கோட்டையில் தொழில் செய்வதையொட்டி சுப்பிரமணி குலவணிகர்புரத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம்போல பணியை முடித்துவிட்டு கடையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் வீட்டுக்குள் நடந்து சென்ற அவரை கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில் நிலத் தகராறு காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
