தம்பியை குத்திக்கொன்ற ராணுவ வீரர் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மேலமுடிமன் கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். இவரது மகன் கார்த்திக் (வயது 22) ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மாலினி என்ற மனைவியும், மகிஸ்ரீ என்ற குழந்தையும் உள்ளனர். இவரது அண்ணன் செல்வகுமார் (24). ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது சாத்தூர் அமீர்பாளையத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கார்த்திக் தனது தாயாரிடம் 3.5 பவுன் நகையும் ரூ.1.5௦ லட்சமும் வாங்கினாராம். இதையறிந்த செல்வகுமார் தனது அம்மாவிடம் தனக்கும் பணம் மற்றும் தங்க நகைகள் வேண்டும் என்று கேட்டு பிரச்சினை செய்தார். இது தொடர்பாக நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்ட தகராறில் செந்தில்குமார் தம்பி கார்த்திக்கை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்த கார்த்திக் அதே இடத்தில் இறந்து போனார். இதனை தடுக்க முயன்ற அவரது உறவினர் கண்ணன் என்பவருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கத்தி மற்றும் தப்பிச் செல்ல பயன்படுத்திய ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்தை மணியாச்சி டி.எஸ்.பி. சங்கர் பார்வையிட்டார்.
நகை பிரச்சினையில் தம்பியை ராணுவ வீரர் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.