• April 19, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி ; கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் 1-ந் தேதி வரை மனு கொடுக்கலாம்

 தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி ; கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் 1-ந் தேதி வரை மனு கொடுக்கலாம்

தூத்துக்குடி ஜமாபந்தியின் போது கலெக்டர் செந்தில்ராஜ் மனுக்கள் பெற்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு பணி (ஜமாபந்தி) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று தொடங்கியது.
அதன்படி தூத்துக்குடி தாலுகா ஜமாபந்தி அலுவலராக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு ஜமாபந்தியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூத்துக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட உமரிக்கோட்டை, கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டப்பாறை, அல்லிக்குளம், மறவன்மடம், செந்திலாம்பண்ணை, தெற்குசிலுக்கன்பட்டி ஆகிய 7 கிராமங்களுக்கான கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. அந்த பகுதி பொதுமக்கள் திரளானவர்கள் வந்து மனு கொடுத்தனர்.
உட்பிரிவுபட்டா கோரி 8 பேரும், முதியோர் உதவித்தொகை கோரி 4 பேரும், தனிப்பட்டா கோரி 36 பேரும், இலவசவீட்டுமனைப்பட்டா கோரி 4 பேர் உள்பட மொத்தம் 53 பேர் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்களை உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 10 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 4 பேருக்கு ரேஷன் கார்டு, 2 பேருக்கு முதியோர் உதவித்தொகை, ஒருவருக்கு விதவை உதவித்தொகை ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) அனைத்து தாலுகா அலுவலகத்திலும் தொடங்கி உள்ளது. தூத்துக்குடி தாலுகாவில் எனது தலைமையில் வருகிற 1-ந் தேதி வரையும், திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் 1.6.2022 வரை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமையிலும், எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் கோவில்பட்டி உதவி கலெக்டர் தலைமையில் 7.6.2022 வரையும், சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் 31.5.2022 வரை திருச்செந்தூர் உதவி கலெக்டர் தலைமையிலும், விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் 7.6.2022 வரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும் நடைபெறும்.
ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் 7.6.2022 வரை தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), தலைமையிலும், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் 1.6.2022 வரை உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும், ஏரல் தாலுகா அலுவலகத்தில் 3.6.2022 வரை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையிலும், கயத்தார் தாலுகா அலுவலகத்தில் 7.6.2022 வரை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும் நடக்கிறது.
\இதில் 24 வகையான வருவாய் கணக்குகள் தணிக்கை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி பொதுமக்கள் தங்கள் குறைகளை ஜமாபந்தி அலுவலரிடம் கொடுத்து உடனடியாக தீர்வு பெறலாம். வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு நடந்தது தொடர்பாக சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து அவர்களிடம் மாவட்ட பதிவாளர் விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளார். அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *