நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர்கள் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 18 பேர் அடங்குவர். இவர்களில் தி.மு.க.வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்க இருக்கிறது.
இந்நிலையில் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 31-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அ.தி.மு.க.வின் பலம் குறைந்து, இருப்பதால் மாநிலங்களவை தேர்தலில், தி.மு.க.வுக்கு 4 இடம் கிடைத்திருக்கிறது. அதில் ஒரு இடம் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு வேட்பாளர்களை தி.மு.க. ஏற்கனவே அறிவித்து விட்டது.
இந்த நிலையில் அ.தி.மு.க. தரப்பில் 2 வேட்பாளர்கள் பெயர்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்து உள்ளனர்.
முன்னாள் அமைச்சரும், கழக வழிகாட்டுக்குழு உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவருமான ஆர்.தர்மர் ஆகியோர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
கழக மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை கழக ஆட்சிமன்ற குழு பரிசீலனை செய்து எடுத்த முடிவின்படி அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக மேற்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.