பாபநாசம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் – பக்தர்கள் குவிந்தனர்

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள உலகம்மை உடனுறை பாபநாச சுவாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், 6-ம் கால யாகசாலை பூஜை, மஹா பூர்ணாகுதி, காலை 7.15 மணிக்கு யாத்ராதானம், பிரதான கலசங்கள் புறப்பாடு நடந்தது.
7.45 மணிக்கு பாபநாச சுவாமி விமானங்கள் மற்றும் ராஜகோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், 8.10 மணிக்கு சுவாமி மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், 8.20 மணிக்கு உலகம்மை மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் வீதி உலா நடைபெறும்.


