டிரான்ஸ்பார்மர் இடமாற்றம் பணி: கோவில்பட்டி புதுரோடு பகுதியில் மின்தடை

கோவில்பட்டி ரெயில்நிலையம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரெயில் நிலைய நுழைவு பகுதி புதிதாகஅமைக்கப்படுகிறது. மெயின் ரோட்டில் ஞானமலர் பெட்ரோல் பங்க் அருகே இருந்த பழைய டிரான்ஸ்பார்மர் அகற்றப்பட்டு 50 அடி தூரத்தில் இடமாற்றம் செய்யப்படுகிறது
இந்த பணிகள் சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் புதுரோடு மற்றும் ரெயில் நிலைய பகுதிகளில் மின்சார சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது. நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்பட்டது.
இன்று காலை 9 மணிக்கு மின்தடை செய்யப்பட்டு விட்டது. பகல் முழுவதும் மின்சப்ளை இல்லாததால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த பகுதியில் அதிக அளவில் வங்கிகள் உள்ளன. அங்கு ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டாலும் ஊழியர்கள் கொளுத்தும் வெயிலுக்கு கடும் அவதி அடைத்தனர்.

மாலை 6 மணிக்கு மின்சப்ளை சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் மேலும் சில மணி நேரம் ஆகும் என்று தெரிகிறது. பணிகள் நடைபெறும் இடத்தில் மின்வாரிய உயர் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.
