அரசு புறம்போக்கு இடத்தில், 5 ஆண்டுக்கு மேல் குடியிருப்போர் பட்டா பெற விண்ணப்பிக்கலாம்; அமைச்சர் கீதாஜீவன் தகவல்

மே தினத்தையொட்டி கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இன்று நடந்தது.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, கிராம மக்களிடமிருந்து மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

இனாம் மணியாச்சி முதல் எல்லீஸ் நகர் வரை புதிய தார்ச்சாலை அமைக்க ரூ.34 லட்சம், திருமால் நகரில் தார்ச்சாலை அமைக்க ரூ.73 லட்சம், கண்மாய் கரை சாலை அமைக்க ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றுக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும். இந்த ஊராட்சியில் 2024-25-ல் ரூ.1.66 கோடிக்கு பணிகள் நடந்து வருகின்றன. இந்தாண்டு பல்வேறு திட்டத்தின் கீழ் ரூ.1.41 கோடிக்கு பணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இனாம் மணியாச்சி ஊராட்சி எதிர்காலத்தில் நகராட்சியாக உள்ளது.
இங்கு தேவைகள் நிறைய இருக்கும். நகராட்சியாக மாறும் போது அனைத்து வசதிகளும் முழுமையாக கிடைக்கும். மகளிர் உரிமைத்தொகையை பொருத்தவரை விடுபட்ட தகுதி உள்ள ஏழை எளிய பெண்கள் விண்ணப்பிக்க தமிழக முதல்வர் வாய்ப்பு வழங்கி உள்ளார்.

ஜூன் 4-ம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்பட உள்ளது. எந்த இடத்தில் முகாம் நடைபெறும் என விரைவில் அறிவிக்கப்படும். அரசு புறம்போக்கு இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கு விண்ணப்பித்தால் விரைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த முறை பட்டா கொடுத்தவர்களுக்கு கணினி பட்டா வழங்கப்படாமல் உள்ளதால், அவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு கீதா ஜீவன் \பேசினார்.

தொடர்ந்து, ஊராட்சி செயலாளர் சந்திரன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், ஒன்றிய திமுக செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், பீக்கிலிபட்டி முருகேசன்,நகரச் செயலாளர்,கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர், பீட்டர்,ரமேஷ்,செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ்,வழக்கறிஞர் அழகர்சாமி, காங்கிரஸ் கட்சி சுப்பாராயலு மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
