சூறைக்காற்றுடன் பெய்த மழையினால் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன; இரவு முழுவதும் இருளில் மூழ்கிய கிராமம்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே நாரைக்கிணறு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இதில் நாரைக்கிணறு பகுதியில் 3 உயர் மின்னழுத்த மின் கம்பங்கள், மற்றும் 10 சிறிய மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன. 10-க்கும் மேற்பட்ட வேப்பமரம், அத்திமரம் உள்ளிட்ட மரங்களும் வேரோடு சாய்ந்தன.

இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் 3 வீடுகள் மீது மரங்கள் விழுந்ததில் சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுடலைமுத்து தலைமையில், உதவி மின் பொறியாளர்கள் பால்முனிசாமி, ராஜேஷ் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில் கொடை விழா நடந்தது. இதற்காக அமைக்கப்பட்டு இருந்த பந்தல் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் முற்றிலுமாக பந்தல் சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இரவில் மீட்பு பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களை சீரமைத்து நேற்று காலை 8 மணியளவில் நாரைக்கிணறு பகுதிக்கு மின்இணைப்பு வழங்கினர். சூறைக்காற்றில் விவசாயத் தோட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

