பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அன்புமணி ராமதாஸ் புறக்கணிப்பு-15 பேர் மட்டுமே பங்கேற்பு

வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 11ம் தேதி சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கூட்டணியை பற்றி முடிவெடுக்க நான் இருக்கிறேன். அதை நான் முடிவு செய்வேன்’ என்றார். மேலும், கட்சியில் நிறையபேர் உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பதாகவும் அனைவரின் கணக்கையும் முடித்து விடுவேன் என்றும் கூறினார்.
இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் தலைமையில் பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி உள்பட பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என பலர் புறக்கணித்துள்ளனர். கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட ஒருசில நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வரவில்லை. மொத்தமாக 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 15 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளிடம் டாக்டர் ராமதாஸ் கருத்துகளை கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
செயல் தலைவர் அன்புமணிக்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டது. வரலாம்; வந்து கொண்டிருக்கலாம். சிலர் மாநாடு களைப்போடு இருப்பதால் இந்த கூட்டத்துக்கு வரவில்லை. கூட்டத்திற்கு வராதவர்கள் என்னை தொடர்பு கொண்டு காரணங்களை தெரிவித்தனர்.
பாமகவில் கோஷ்டி மோதல் என்பதே கிடையாது. செயல்பட முடியவில்லை என யாரும் விருப்பம் தெரிவித்தால் விரும்பியபடி மாற்றப்படுவார்கள். அவர்களாகவே விரும்புகிற வரை யாரையும் நீக்கத் தேவையில்லை.
ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற அந்த சீற்றம், எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த சிங்கத்தின் கால்கள் பழுதுபடவே இல்லை. சீற்றம் அதிகமாகத்தான் இருக்கிறது. 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக்கொள்வதற்கான கூட்டம் இது.

50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கான வித்தைகளை சொல்லிக்கொடுத்தேன். தனியாக நின்றாலும் 40 தொகுதிகள் வெற்றி பெற வேண்டும். சட்டசபை தேர்தலில் 50 தொகுதிகளில் பாமக வெற்றி பெற வேண்டும். கூட்டணி அமைத்தே பாமக தேர்தலில் போட்டியிடும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
