தமிழ்நாடு அமைச்சரவையில் திடீர் மாற்றம்; பொன்முடி,செந்தில் பாலாஜி நீக்கம்

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்த சூழலில் வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி அண்மையில் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தன. பொன்முடியின்
பேச்சையடுத்து அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. இருந்தபோதும், அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
அதேபோல, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவியை தொடர்வதில் சிக்கல் எழுந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமைச்சர் பதவியா? அல்லது ஜாமீனா? என்பதை 28ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டு கெடு விதித்தது. இதனால், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகலாம் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி மாற்றப்படும் அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தத் துறை எனும் தகவல் வெளியாகி உள்ளது.


அதன்படி,அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பொன்முடி வகித்த வனத்துறை,
பால்வளத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செந்தில்பாலாஜி கவனித்து வந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வத்துறை, அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு மீண்டும் பால்வளத்துறை வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நாளை மாலை 6 மணிக்கு கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இருவரின் ராஜினாமா கடிதங்களும் ஏற்கப்பட்டதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் ஜாமீனா? அல்லது அமைச்சர் பதவியா? என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியிருந்த நிலையில அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
