தூத்துக்குடி: விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி

பெற்றோருடன் பெலிக்ஸ் காபிரியேல் மார்க்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் கருங்கடல் கிராமம் மேல பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தங்கத்துரை- விஜயா தம்பதியரின் மகன் பெலிக்ஸ் காபிரியேல் மார்க் (வயது 27). சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் (ஆட்டோ மொபைல்) படிப்பை கடந்த 2019ஆம் ஆண்டு முடித்தார்.
அதன்பின் அவர் எதிர்பார்த்த பணி கிடைக்கவில்லை. இதனால் அவரது தந்தை தங்கத்துரை, ஐஏஎஸ் தேர்வு எழுத வலியுறுத்தினார். முதலில் அத்தேர்வு கடினம் என மறுத்து வந்த பெலிக்ஸ் காபிரியேல் மார்க், பின்னர் தந்தை விருப்பபடி ஐஏஎஸ் தேர்வு எழுதி தொடங்கினார்.
முதலில் 3முறை தேர்வு ஆகவில்லை. அதன்பின் தொடர்ந்து எழுதியதில் இரண்டு முறை நேர்காணல் வரை சென்று வந்துள்ளார். 6 வது முறையாக இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வு எழுதியதில் 783 வது இடம் பெற்று தேர்வு பெற்றுள்ளார். நேர்காணல் முடிந்த நிலையில் பணி ஒதுக்கீடுக்காக காத்திருக்கிறார்.
ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி பெற்றுள்ள பெலிக்ஸ் காபிரியேல் மார்க்கின் தந்தை தங்கதுரை விவசாயம் செய்து வருகிறார். மகன் பெலிக்ஸ் காபிரியேல் மார்க் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி பெற்றுள்ள பெலிக்ஸ் காபிரியேல் மார்க் கூறியதாவது:-
எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் எனக்கு வாய்ப்பு அளித்த கடவுளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு உறுதுணையாக இருந்து எனது பெற்றோர், எனது தந்தையின் நணபர்கள் மற்றும் உறவினர், எனது நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
சிறிய கிராமமான மேல பனைக்குளத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ளது எனக்கு பெருமை அளிக்கிறது. என்னை போல் கிராமபுற பகுதியில் பலர் இந்த தேர்வு எழுதி வெற்றி பெற்று பணிக்கு வர வேண்டும். எனக்கு எந்த பணி ஒதுக்கினாலும் நேர்மையுடன் பணியாற்றி மக்களுக்கு சேவை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.


