மல்லை சத்யாவுடன் சமரசம்: கட்சி பதவி விலகல் முடிவை துரை வைகோ வாபஸ் பெற்றார்



ம.தி.மு.க. முதன்மைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, துரை வைகோ நேற்று விலகுவதாக அறிவித்தார்.
தன்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தை வைகோவுக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும், மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்றும் அறிக்கை யில் கூறி இருந்தார்.
இந்த நிலையில் இன்று சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், துரை வைகோ பதவி விலகலை ஏற்க மதிமுக நிர்வாகிகள் மறுத்தனர். துரை வைகோ முதன்மைச் செயலாளராக தொடர வேண்டும் என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் 40 பேர் பேசினர்.
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி வருகிற 26ம் தேதி சென்னை, திருச்சி, கோவையில் மதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறது. மேலும் மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் துரை வைகோ தொடர வேண்டும் எனவும் துரை வைகோவின் விலகல் கடிதத்தை ஏற்க கூடாது எனவும் நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு இடையே நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுமாறு ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “துரை வைகோ அரசியலுக்கு வர வேண்டும் என்று முதன் முதலில் விரும்பியது நான்தான். மதிமுக நலனுக்கு எதிராக எந்த இடத்திலும் செயல்படவில்லை. என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். கடைசி வரை வைகோவின் தொண்டனாக இருந்து விட்டுப் போகிறேன்” என்றார்.
இதை தொடர்ந்து வைகோ இருவரிடையே சமரசம் செய்து வைத்தார்.

மல்லை சத்யாவை கட்சியை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று கூறிய வைகோ
துரை வைகோ, மல்லை சத்யா இருவரும் பழைய நிகழ்வுகளை மறந்துவிட்டு இணைந்து பணியாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் இருவர கைகளையும் இணைத்து வைத்தார்.
மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தியதை தொடர்ந்து மதிமுக முதன்மை செயலாளர் பதவி விலகல் முடிவை வாபஸ் பெற்றார் துரை வைகோ
பின்னர் கட்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று துரை வைகோ, மல்லை சத்யா இருவரும் கூட்டாக அறிவித்தனர்.

