வேலை உறுதி திட்டத்தில் பணி கேட்டு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் பணி கேட்டு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிளவிபட்டி, இனாம் மணியாச்சி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி அருகே கிளவிபட்டி, இனாம் மணியாச்சி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் இன்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

‘அவர்கள், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு முறையாக நிதி விடுவிக்க வேண்டும். இத்திட்டத்தில் 100 நாட்கள் முறையாக பணி வழங்க வேண்டும். இனாம் மணியாச்சி ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கிளவிபட்டி கிளை செயலாளர் சித்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சின்னதம்பி, விஜயராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ்குமார் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகனிடம் கோரிக்கை மனு வழங்கினர். மனுவில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாட்கள் பணி வழங்க வேண்டும். ஆனால், கடந்த 2024-25-ம் நிதியாண்டில் சராசரியாக 50 நாட்களுக்கும் குறைவாகவே பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே, கிளவிபட்டி, இனாம் மணியாச்சி ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் வேலை உறுதி திட்டத்தில் முறையாக பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி இருந்தனர்.

