• April 4, 2025

கச்சத்தீவை மீட்க கோரி சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்

 கச்சத்தீவை மீட்க கோரி சட்டசபையில்  தனித்தீர்மானம் நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டப் பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இலங்கையில் அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது. தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள்தான் என்பதை மத்திய அரசு அடிக்கடி மறந்துவிடுகிறது. 

எல்லைதாண்டி வந்தார்கள் என்று சொல்லி  அவர்களுக்கு அதிகபட்ச சிறை தண்டனை விதிக்கப்படுகிறது அல்லது அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுகிறது. அண்டை நாடாக இருந்து கொண்டு இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான இரக்கமும் இல்லாமல், நம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும்விதமாக, ஏன் அடியோடு பறிக்கும்விதமாக இலங்கைக் கடற்படையினரும், இலங்கை அரசும் நடந்து கொள்வது நமக்கெல்லாம் மிகுந்த கவலையளிக்கிறது. இதனை மத்திய பா.ஜ.க. அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்.

தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் நான் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டு வருகிறேன். இதுவரைக்கும் மீனவர்கள் கைது, தாக்குதல் குறித்து 74 கடிதங்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் எழுதியிருக்கிறேன்.  பிரதமரை நேரில் சந்திக்கும் போதெல்லாம் இதுகுறித்து வலியுறுத்தியிருக்கிறேன். இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்பட இயலாமல் கடந்து கொண்டிருக்கிறது.

கடிதம் எழுதினால் விடுவிப்பது, பிறகு கைது செய்வதென்று இலங்கை அரசின் நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருப்பதால், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. எவ்வளவு காலத்துக்கு இதனைச் சகித்துக் கொண்டு இருக்க முடியும்?  இதுபோன்ற சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவு மீட்பே மிகச் சரியான வழி என்பதை மீண்டும் வலியுறுத்திட விரும்புகிறேன்.

கச்சத்தீவு விவகாரத்தைப்  பொறுத்தவரைக்கும், கச்சத்தீவை மாநில அரசுதான் இலங்கைக்கு அளித்தது போன்று ஒரு தவறான தகவலைப் பரப்பி அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகி விட்டது. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக கட்சிகள் செய்யும் அதே தவறை மத்திய அரசு செய்வது வருந்தத்தக்கது; ஏற்கமுடியாதது. கச்சத்தீவைப் பொறுத்தவரைக்கும், அந்தத் தீவைக் கொடுத்து, ஒப்பந்தம் போட்ட போதே முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். தி.மு.க. எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தனர். 

ஏற்கனவே முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கச்சத்தீவைத் திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய பா.ஜ.க. அரசு இன்றுவரை கச்சத்தீவை மீட்பது குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. 

ஆகவே, இந்தச் சூழலில், தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கைக் கடற்படையினரால் கடும் தாக்குதலுக்கு உள்ளாவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, கடும் அபராதம் விதிக்கப்படுவது போன்றவற்றிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்கவும், விரைவில் இலங்கை செல்லும் பிரதமர் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், கச்சத்தீவை மீட்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் விரும்புகிறது. இதனை அடிப்படையாகக் கொண்ட தீர்மானத்தை இப்போது நான் முன்மொழிகிறேன்: 

தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களைப் போக்கிடவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.

இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும், அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் அந்நாட்டு அரசுடன் பேசி, இலங்கை சிறையில் வாடும் நம் நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்று இப்பேரவை வலியுறுத்துகிறது.” என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

தமிழ்நாட்டைச் சார்ந்த  இந்திய மீனவர்களின் நலன் கருதி, அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இந்த தீர்மானத்தின்மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. இந்த தீர்மானத்துக்கு அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தன.

இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலமாக முதல்-அமைச்சர் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *