ஏப்ரல் 1- முட்டாள்கள் தினம் பின்னணி ….

உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினம் என்று சொல்கிறோம். கி.பி. 16ம் நூற்றாண்டுவரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளில் ஏப்ரல் 1ம் தேதிதான் புத்தாண்டாகக் கடைபிடிக்கப்பட்டது. அப்போதைய ஜூலியன் காலண்டரில் அப்படித்தான் சொல்லப்பட்டிருந்தது.
1582ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி புதிய காலண்டரை 13ம் கிரிகோரி என்ற போப் ஆண்டவர் அறிமுகப்படுத்தினார். இதைத்தான் கிரிகோரியன் காலண்டர் என்று சொல்கிறோம். இந்தக் காலண்டரில் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பல நாட்டு மக்களும் ஏற்க மறுத்தார்கள். அப்படி ஏற்க மறுத்தவர்கள் ஏப்ரல் முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடினார்கள்.
ஜனவரி முதல் நாளை புத்தாண்டாக ஏற்று கொண்டவர்கள் இவர்களை ஏமாற்ற நினைத்தார்கள். ஏப்ரல் முதல் நாளில் புத்தாண்டு கொண்டாடுவோர் வீட்டுக்குப் பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்தார்கள். ஆனால், பரிசுப் பெட்டியைத் திறந்தால், அதில் ஒன்றும் இருக்காது. ‘நீ ஒரு முட்டாள்’ என்று துண்டுச்சீட்டுதான் இருக்கும்.
அதேபோலச் சட்டையின் பின்னால் ‘நான் ஒரு முட்டாள்’ என்ற துண்டுச்சீட்டை ஒட்டி கேலி பேசினார்கள். பிரான்ஸ் நாட்டில்தான் முதன் முதலில் இப்படி முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடியதாகச் சொல்கிறார்கள்.
பின்னர் படிப்படியாக எல்லா நாடுகளும் புதிய காலண்டரை ஏற்றுக் கொண்டன. தொடக்கத்தில் புதிய காலண்டரை அப்படி ஏற்றுக் கொண்ட நாடுகள், ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொண்டாடும் புத்தாண்டு தினத்தை, முட்டாள்கள் தினம் என அழைத்தார்கள்.
இப்படித்தான் முட்டாள்கள் தினம் அறிமுகமானது. இன்று உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டரைப் பின்பற்றினாலும் ஏப்ரல் முதல் நாளை முட்டாள் தினமாகக் கொண்டாடுவது மட்டும் மறையவில்லை.
சிறுவயதில் உங்கள் பள்ளியில் உங்கள் நண்பர்களோடு முட்டாள்கள் தினத்தை கொண்டாடியது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும். ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொண்டு சந்தோசமாக வாழ்ந்த காலம் அது.
சர்வதேசரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிலாளர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன் வருவதில்லை.
ஆஹா!’ என்று பலமுறை நம்மை பிரமிக்கவைத்த பல தொழில்நுட்ப உபகரணங்களைக் கண்டுபிடித்த மறக்க முடியாத விஞ்ஞானிகளில், தாமஸ் ஆல்வா எடிசன், கிரஹாம்பெல், அலெக்ஸ்சாண்டர் ஃபிளெம்மிங், ரைட் பிரதர்ஸ், நியூட்டன், ஜேம்ஸ் வாட், ஐன்ஸ்டீன், சார்லஸ் பாபேஜ், கலிலியோ, ஸ்டீஃபன் ஹாக்கிங் போன்றோர் என்றைக்கும் ஸ்பெஷல் இடம்பிடித்தவர்கள்.

‘முட்டாள்கள்’ தினத்தில் நாம் முட்டாள்கள் ஆனாலும் சரி, பிறரை முட்டாள்கள் ஆக்கினாலும் சரி, மனம் புண்படாமல் பண்பாக விளையாடுவோம்.
தொகுப்பு: முனைவர் பொ. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
