கோவில்பட்டி அருகே பெட்ரோல் பங்க் மேலாளர் படுகொலை


கோவில்பட்டி அடுத்த கயத்தாறு அருகே காப்புலிங்கம் பட்டியைச் சேர்ந்தவர் சங்கிலி பாண்டி(வயது 29). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடம்பூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் சங்கிலி பாண்டி மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் வழக்கம் போல் இன்று காலை 9 மணிக்கு கயத்தாரில் இருந்து புறப்பட்டு கடம்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
கயத்தாறு – கடம்பூர் நெடுஞ்சாலை சத்திரப்பட்டி விலக்கு அருகே சென்றபோது அவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பின்தொடர்ந்து வேகமாக வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சங்கிலி பாண்டி முட்புதரில் போய் விழுந்தார்.
பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிகொண்டு இருப்பதை பார்த்த காரில் இருந்தவர்கள், கீழே இறங்கி வந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் சங்கிலி பாண்டி பரிதாபமாக இறந்து போனார். ஒரு சில நிமிடங்களில் நடந்த இந்த கொலையை தொடர்ந்து காரில் இருந்தவர்கள், கொலையை விபத்து போல் சித்தரிக்கும் நோக்கத்தில் காரை அங்கேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதற்கிடையே அந்த வழியாக சென்ற சிலர் சேதம் அடைந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மற்றும் பிணமாக கிடந்தவரை பார்த்து விபத்து என்று முடிவு செய்து போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.
இதைதொடர்ந்து கயத்தாறு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். இறந்து கிடந்தவரின் உடலில் அரிவாள் வெட்டு காயங்களை பார்த்ததும் இது திட்டமிட்ட கொலை என்று முடிவு செய்தனர்,
உடனடியாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். துப்பறியும் மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
சங்கிலி பாண்டியனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமாராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்..
இதனிடையே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண் தொடர்பான பிரச்சனையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது,
இது தொடர்பாக கயத்தாறு காவல் நிலைய போலீசார் சந்தேகத்தின் பேரில் கயத்தாறு மற்றும் காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த 5 பேர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த 2 பேரை தனிப்படை உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கினர்.
அப்போது அவர்கள் மீது அரிவாள்களை வீசிவிட்டு தப்பி ஓட முயற்சி செய்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெயர் சண்முகராஜ் மற்றும் மகாராஜன் என தெரிய வந்துள்ளது. மேலும் தீவிர விசாரணை நடக்கிறது கொலையாளிகள் பயன்படுத்திய கார் யாருடையது? என்று விசாரித்து வருகிறார்கள்.
