கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி பெருந்திருவிழா நாட்கால் நடும் விழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு நாட்கால் நடும் வைபவம் இன்று நடந்தது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி, விளா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.
பின்னர் மூலவர் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சன்னதி முன்பு நாட்காலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மாட வீதி வழியாக எடுத்துவரப்பட்டது.
பின்னர் கோவில் முன்பு விநாயகர் பூஜை, நாட்கால் பூஜை ஆகியவை நடத்தப்பட்டு திருவிழா நாட்கால் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு,கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) வள்ளிநாயகம், அறங்காவலர்கள் திருப்பதிராஜா,சண்முகராஜ், கோவில் ஆய்வாளர் சிவகலைப்பிரியா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
5-ம் தேதி காலை 7 மணிக்கு கோவிலில் சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலை, மாலை சுவாமி, அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 13-ம் தேதி தேரோட்டம், 14-ம் தேதி தீர்த்தவாரி, 15-ம் தேதி இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது.
இந்த விழா நாட்களில் கோவில்பட்டி களை கட்டும்.மாலை நேரங்களில் கோவில் பகுதியில் உள்ள மைதானத்தில் பொருட்காட்சி நடக்கும்/ இங்கு அதிக அளவில் மக்கள் கூடி மகிழ்வார்கள்.
