கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்; தூத்துக்குடி விழாவில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் தொடக்க விழா, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு மதியம் 1.05 மணிக்கு வந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சால்வை, புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கி வரவேற்றனர். கட்சி நிர்வாகிகளுடன் முதல் அமைச்சர் செல்பி எடுத்துக் கொண்டார்.
அதனை தொடர்ந்து தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் ரூ.32 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து இந்த டைடல் பூங்காவில் அமைய உள்ள 2 நிறுவனங்களுக்கு இடஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினார்.
6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
‘இந்த திட்டத்தின் தொடக்க விழா தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. <
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக 10 மாணவிகளுக்கு பற்றட்டைகளை (Debit Card) முதல் அமைச்சர் மு.க/ஸ்டாலின் வழங்கினார்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75 ஆயிரத்து 28 மாணவிகள் பயன்பெறும் வகையில் மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 4,680 மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர். மேலும் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வாகனங்களை முதல்-அமைச்சர் வழங்கினார்.
விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது”;-
ஆயிரக்கணக்கான பெண்கள் ஒரே இடத்தில் கூடியிருப்பதை காணும்போது பெருமையாக உள்ளது. நாட்டிலேயே தமிழக பெண்கள் தான் அனைத்து நிலைகளிலும் முதலிடத்தில் உள்ளனர்.
நாட்டில் உயர்கல்வி கற்கும் பெண்கள் எண்ணிக்கையில் தமிழகம் தான் டாப். தமிழக பெண்கள் இந்தியாவிலேயே மதிப்பெண் உள்பட அனைத்திலும் டாப்-ஆக உள்ளீர்கள். உயர்கல்வி பயில்வது, வேலைக்கு செல்வது அனைத்திலும் தமிழக பெண்கள் டாப்-ல் இருப்பதே பெரியாரின் கனவு.
கல்வியை பொறுத்தவரை பெண்கள் தான் முன்னிலையில் உள்ளனர். 100 ஆண்டுகளுக்கு முன்னர் சமூக ரீதியாக, பாலின ரீதியாக கல்விக்கு தடை இருந்தது. கல்வி கனவை அனைவருக்கும் திறந்து விட்ட ஆட்சி நீதிக்கட்சி ஆட்சி.
இந்தியாவிலேயே அனைவருக்கும் கல்வி என சட்டம் இயற்றியது நீதிக்கட்சி. 100 பெண்களில் இருவர் மட்டுமே கல்வி பயின்று இருந்த நிலை இன்று மாறியுள்ளது. வந்த பாதையை மறக்காமல் இருந்தால் தான் வழித்தவறி போகாமலிருக்க முடியும்.
புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைப்பதில் Dravidian Stock ஆக நான் பெருமைப்படுகிறேன். பெருந்தலைவர் காமராஜர் பெயர்கொண்ட கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதை பெருமைக்குரியதாக கருதுகிறேன். காமராஜர் ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தில் ஏராளமான பள்ளிகள் திறக்கப்பட்டது. நாட்டிற்கே தமிழக அரசின் திட்டங்கள் தான் வழிகாட்டியாக உள்ளன
இவ்வாறு மு,க.ஸ்டாலின் பேசினார்.
அமைச்சர்கள் கீதா ஜீவன், மீன்வளம் – அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சட்டமன்ற உறுப்பினர்கள் எம் சி. சண்முகையா,மார்க்கண்டேயன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் சுலந்து கொண்டனர்.