கோவில்பட்டியில் மாநில ஆக்கி போட்டி: சென்னை பல்கலைக்கழக அணி முதலிடம்
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் முன்னாள் ஊராட்சி தலைவர் அய்யாசாமி நினைவு 19 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஆக்கி போட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஆக்கி மைதானத்தில் 4 நாட்கள் நடந்தன.
போட்டியில் 25 அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதி போட்டியில் கோவில்பட்டி அசோக் நினைவு ஆக்கி கிளப் (ஏ.எம்.சி.) அணியும், இலுப்பையூரணி டாக்டர் அம்பேத்கர் ஆக்கி கிளப் அணியும் மோதின. இதில், 3 – 0 என்ற கோல் கணக்கில் ஏ.எம்.சி. அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
2-வது அரையிறுதி போட்டியில் பாண்டவர்மங்கலம் ஆக்கி கிளப் அணியும் சென்னை பல்கலைக்கழக அணியும் மோதின. இதில் 2 – 1 என்ற கோல் கணக்கில் சென்னை பல்கலைக்கழக அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
தொடர்ந்து நடந்த இறுதிப் போட்டியில் சென்னை பல்கலைக்கழக அணியுடன், கோவில்பட்டி அசோக் நினைவு ஆக்கி கிளப் (ஏ.எம்.சி.) மோதியது. இதில் 1 – 0 என்ற கோல் கணக்கில் சென்னை பல்கலைக்கழக அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது.
முன்னதாக நடைபெற்ற 3, 4-வது இடங்களுக்கான போட்டியில் பாண்டவர்மங்கலம் ஆக்கி கிளப் அணி, இலுப்பை யூரணி டாக்டர் அம்பேத்கர் ஆக்கி கிளப் அணியுடன் மோதியது. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலை பெற்றனர்.
அதைத்தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க டைபிரைக்கர் முறை கடைபிடிக்கப்பட்டதில் பாண்டவர்மங்கலம் அணி 5 கோல்களும், இலுப்பையூரணி அணியினர் 4 கோல்களும் அடித்தனர். முடிவில் 6 – 5 என்ற கோல் கணக்கில் பாண்டவர்மங்கலம் ஆக்கி கிளப் அணி வெற்றி பெற்று 3-ம் இடத்தை பெற்றது. நடுவர்களாக தாமரை, கார்த்திக் ராஜா, சுமித், ஜீவா, அஜித், பூவேஷ் ஆகியோர் செயல்பட்டனர்.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி மாவட்ட தலைவர் (பொறுப்பு) மணிமாறன் தலைமை தான்கினார்,. அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சுழற்கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
முதலிடம் பிடித்த சென்னை பல்கலைக்கழக அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் அய்யாசாமி நினைவு சுழற் கோப்பை வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த ஏ.எம்.சி. அணிக்கு ரூ.15 ஆயிரம், 3-வது இடம் பிடித்த பாண்டவர்மங்கலம் ஆக்கி கிளப் அணிக்கு ரூ.10 ஆயிரம், 4-வது இடம் பிடித்த இலுப்பையூரணி ஆக்கி கிளப் அணிக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர் முருகன் வரவேற்றார். முன்னாள் ஆக்கி வீரர் சாமிதுரை நன்றி கூறினார்.