புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னையில் முதல் அமைச்சர் நேரில் ஆய்வு

 புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னையில் முதல் அமைச்சர் நேரில் ஆய்வு

வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் ஓட்டல்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவங்களில் நேற்று ஒருநாள் முழுவதும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாடு மையத்திற்கு வருகை தந்து, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

பெஞ்சல் புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. நேற்று இரவு கனமழை பெய்திருக்கிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று இரவு புயல் கரையை கடக்கும் என செய்தி வந்திருக்கிறது. அதனை முன்னிட்டு, மாநில அவசரகால கட்டுப்பாடு மையத்தில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்களை தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரங்களை கேட்டறிந்தோம்.

பல்வேறு இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பொறுப்பில் இருக்கக் கூடிய அமைச்சர்கள் அங்குள்ள நிலவரங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதுவரை அங்கிருந்து ஆபத்தான செய்திகள் எதுவும் வரவில்லை. அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை தண்ணீர் தேங்க கூடிய இடங்களில் எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காரணத்தால் இதுவரை எந்த பிரச்சினையும் எங்கும் ஏற்படவில்லை. அவ்வாறு ஏதேனும் இருந்தாலும் அதை சரிசெய்வோம்

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *