பஞ்சம் போக்கிய நெல் ரகம் ஐ.ஆர்.- 8

 பஞ்சம் போக்கிய நெல் ரகம் ஐ.ஆர்.- 8

முதன் முதலில் ஐ.ஆர்.8 நெல் பயிரிட்ட விவசாயி சுப்பாராவ்

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகெங்கும் அடிக்கடி ஏற்பட்ட பஞ்சத்துக்குத் தீர்வாகக் கண்டுபிடிக்கப்பட்ட அருமருந்து இந்த ஐ.ஆர்.8 நெல் ரகம்.

அரிசியை வெறும் உணவு என்று மட்டும் கடந்து சென்றுவிடமுடியாது. அரிசியின் வரலாற்றில் அவல அரசியலும் சுயநலம் மிகுந்த துரோகமும் கறுப்பின அடிமைகளின் துயர் மிகுந்த வாழ்வும் ஒருங்கே இழையோடியுள்ளன.

 நாகரிகம் வளர வளர எதை உண்பது என்பதை மனிதன் தேர்ந்தெடுத்து உண்ணத் தொடங்கினான். காட்டிலும் மேட்டிலும் இயற்கையாக முளைத்ததைச் சாப்பிட்ட மனிதன், தனக்கு வேண்டியதைத் தான் வசிக்கும் இடத்திலேயே விளைவிக்கத் தொடங்கினான். உணவைச் சார்ந்து நாடோடியாகத் திரிந்த மனிதன், ஓர் இடத்தில் நிலைபெறத் தொடங்கினான். விவசாயம் அவனுக்கு வேண்டிய உணவை மட்டும் அளிக்கவில்லை,

மனிதனின் உணவில் அரிசியைத் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியது. அரிசி ஒரு புல் வகையைச் சேர்ந்த தாவரமாகும். ஈரநிலங்களில் வளரக்கூடிய இது தென்கிழக்காசியாவில் தோன்றியது. நெற்பயிர் சராசரியாக ஐந்து மாதங்கள்வரை வளரக்கூடிய தாவரமாகும். இந்தியாவைப் பொறுத்தவரை இமயமலை அடிவாரத்தில் அரிசி தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஔவையார் போன்ற பல பழந்தமிழ் புலவர்களின் பாடல்களில் அரிசி பற்றிய குறிப்புகள் வருகின்றன. அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்புவரை, அரிசியைப் பற்றி ஐரோப்பியர்களுக்குத் தெரியாது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

அக்காலத்தில் பஞ்சங்களால் கொத்துக் கொத்தாக மனித வாழ்வு உதிர்வது அன்று வாடிக்கையாக இருந்தது. 1876 இல் சென்னையில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது, ‘உணவுப் பற்றாக்குறை ஏராளமாக பெருகியது. உணவுப் பஞ்சம் பூதாகரமாக உருவெடுத்து மனிதனின் வாழ்வைப் பெரும் இன்னலுக்கு உள்ளாக்கியது. வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியின் பலனாக, 1960களில் அதிக மகசூல் தரும் நெல் இனம் உருவாக்கப்பட்டது. இந்தோனேசிய அரிசி இனத்தையும் வியட்நாம் அரிசி இனத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட கலப்பின அரிசி அது. சர்வதேச நெல் ஆராய்ச்சிக் கழகம் அதற்கு ஐ.ஆர்-. 8 என்று பெயரிட்டு, 1966, நவம்பர் 29 அன்று பிலிப்பைன்ஸ் நாட்டு விவசாயிகளுக்கு வழங்கியது. 88 கிலோ விதை நெல்லைப் பயிரிட்டு அவர்கள் 71 டன் அரிசியை மகசூல் செய்தனர். இந்த அற்புத அரிசியைப் பற்றிய பேச்சு உலகெங்கும் பரவியது.

குறிப்பாக பீகாரில்  கடுமையான பஞ்சம் நிலவியது. உணவு உற்பத்தியை அதிகரிக்க, அப்போது மத்திய வேளாண் துறை மந்திரியாக  இருந்த சி.சுப்பிரமணியன் கடுமையாக முயன்றார். நோபல் பரிசு பெற்ற வேளாண் விஞ்ஞானியான நார்மன் போர்லக்கை இந்தியாவுக்கு அழைத்து, விவசாய உற்பத்தியைப் பெருக்க உதவுமாறு கேட்டார்.

கோதுமை உற்பத்தியில் நார்மன் ஒரு பெரும் புரட்சியையே உருவாக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவின் பிரதான உணவு அரிசியாக இருந்த காரணத்தால், நார்மனின் முயற்சி இந்தியாவின் உணவுப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்குப் போதுமானதாக இல்லை. பாலைவனத்தில் பெய்த பெருமழை போன்று அப்போதுதான் இந்த ‘ஐ,ஆர்-8’ அரிசி இந்தியாவுக்கு வந்தது.

29 வயது சுப்புராவுக்குத் தான் இந்தியாவின் உணவு உற்பத்தியில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறோம் என்று அப்போது தெரியாது. ஆம், இந்தியாபில் முதன் முதலில் ஐ.ஆர்.8 வகை அரிசியைப் பயிரிட்ட விவசாயி அவர்தான். 1967-ல் சர்வதேச நெல் ஆராய்ச்சி கழகத்திடமிருந்து ஐ.ஆர்.8 விதை அரிசியை வாங்கி, ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்த தனது 2,000 ஹெக்டேர் நிலத்தில் பயிரிட்டார். பாரம்பரிய நெல் விதைகள் ஹெக்டேருக்கு இரண்டு டன் மட்டுமே மகசூல் தரும். இந்த ஐ.ஆர்.8 அவருக்கு ஹெக்டேருக்கு ஏழு டன் மகசூல் அளித்தது. சுப்புராவின் இந்த அபரிமித மகசூல், மற்ற விவசாயிகளையும் ஐ.ஆர்.8 நோக்கிப் படையெடுக்க வைத்தது.

ஐ.ஆர்.8 இனத்தின் வெற்றிக்கு அதிக மகசூல் மட்டும் முக்கியக் காரணமல்ல. குறைந்த காலத்தில் அது அளித்த அதிக மகசூலும் முக்கியக் காரணம். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்ற  விவசாயி ஒரு ஹெக்டேரில் 16 டன் மகசூல் பார்த்தார்.அந்த நன்றியின் பலனாக, தனது மகனுக்கு ‘ஐ.ஆர்.எட்டு’ என்று அவர் பெயரிட்டது மிகுந்த பேசுபொருளாக அன்று இருந்தது. ஐ.ஆர்.8-ன் வெற்றி இந்திய வேளாண் விஞ்ஞானிகளுக்குப் புதிய பாதை அமைத்துக் கொடுத்தது. அவர்கள் அந்தப் பாதையில் சென்று ஐ.ஆர்.20, ஐ.ஆர்.36, ஐ.ஆர்.50 போன்ற பல புது அரிசி வகைகளை உருவாக்கினர்.

வாடன் சம்பா, முடு முழுங்கி, களர் சம்பா, குள்ளக்கார், நவரை, குழிவெடிச்சான், கார், அன்னமழகி, இலுப்பைப்பூ சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை, கல்லுண்டை, கருடன் சம்பா, பனங்காட்டு குடவாழை, சீரக சம்பா, வாசனை சீரக சம்பா, விஷ்ணுபோகம், கைவரை சம்பா, அறுபதாம் குறுவை, பூங்கார், காட்டு யானம், தேங்காய்ப்பூ சம்பா, கிச்சடி சம்பா, நெய் கிச்சிலி போன்ற நமது பாரம்பரிய அரிசி ரகங்கள் எல்லாம் விவசாயிகளுக்கு இன்று மறந்தேவிட்டன.

வித விதமான பூச்சி, புழுக்கள் தாக்கும் புதிய ரகங்களை அதிக ரசாயன உரங்களைப் பயன்படுத்தி அவர்கள் விளைவித்து வருகிறார்கள். பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு இந்தப் பிரச்சினையே இல்லை என்பதை நினைத்துப் பார்க்கக்கூட நேரமின்றி அவர்கள் வணிகப்பிடிக்குள் சுழன்று வருகின்றனர். எது எப்படியோ பஞ்சத்தால் உணவின்றி மனிதன் மடியும் அவலத்தை நிறுத்தியதில் ஐ.ஆர்.8 ரக அரிசிக்குப் பெரும் பங்குண்டு

: அக்ரி சு.சந்திர சேகரன் அருப்புக்கோட்டை

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *