• April 19, 2025

பல்லடம் அருகே மகனுடன் தாய், தந்தை படுகொலை

 பல்லடம் அருகே மகனுடன் தாய், தந்தை படுகொலை


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் தெய்வ சிகாமணி, அலமாத்தாள் என்ற வயதான தம்பதி தங்களது தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது மகன் செந்தில் குமார்., இவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் கோவையில் வசித்து வந்தார்.

நேற்று  செந்தில்குமார் தனது தாய் மற்றும் தந்தையுடன் தோட்டத்து வீட்டில் இருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேரையும் ஆயுதங்களால் தாக்கிஎதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். இதை தொடர்ந்து வீட்டில் இருந்து நகைகளை கொள்ளையடித்து விட்டு கொலையாளிகள்  தப்பி சென்று விட்டனர்,.

இன்று காலையில் அவர்களது வீட்டுக்கு சென்ற சவரத் தொழிலாளி ஒருவர், மூவரும் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிணமாக கிடந்த 3 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நடந்த வீட்டில்  தடயவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் உதவியுடன் கொலை நடந்த இடத்தில் துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பல்லடம் அருகே  3 பேர் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து 6 முதல் 7 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கூர்மையான ஆயுதத்தை கொண்டு மூவரையும் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை ஒருவர் செய்திருக்க வாய்ப்பில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தமிழகம் முழுவதும் வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கொலை சம்பவத்தை கண்டித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்- சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இந்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்கள், “இவற்றை தடுக்க இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா?” என்ற அச்சமிகு கேள்வியை மக்களிடத்தில் எழுப்புகின்றன. தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருக்கும் மு.க.ஸ்டாலினின் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இக்கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க இனியாவது செயல்படுமாறு தி.மு.க. முதல்வரை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி  தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *