அயோத்தியில் குரங்குகளுக்கு உணவளிக்க ரூ.1 கோடி நன்கொடை: நடிகர் அக்ஷய் குமார்
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்ஷய் குமார், ஹவுஸ்புல் 5, வெல்கம் டூ தி ஜங்கில் உள்ளிட்ட இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது சமூகத்துக்கு சில உதவிகளையும் செய்து வருகிறார். மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவை புதுப்பிப்பதற்காக ரூ1.21 கோடி நன்கொடையாக வழங்கினார். அதே போல் கரோனோ உச்சத்தில் இருந்த போது பி.எம்.கேர்ஸூக்கு ரூ.25 கோடி நிவாரண நிதி கொடுத்தார்.
இந்த நிலையில் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் குரங்குகளுக்கு உணவளிக்கும் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். உணவு வழங்கும் வேனில் தனது பெற்றோர் மற்றும் மறைந்த மாமனார் நடிகர் ராஜேஷ் கண்ணா பெயரை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரபல ஊடகத்திற்கு அக்ஷய் குமார் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ராமர் கோயில் போன்ற புண்ணிய ஸ்தலத்தில் குரங்குகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பற்றி கேள்விப்பட்டபோது, உடனடியாக எதாவது உதவி செய்ய வேண்டும் என தோன்றியது. அதனால் தான் இந்த முடிவு. வேனில் எனது பெற்றோர் மற்றும் எனது மாமனார் பெயரை எழுதியது எமோஷ்னலான முடிவு. அவர்கள் எங்கு இருந்தாலும் என்னை பற்றி பெருமைப்படுவார்கள் என்று நான் உணர்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அக்ஷய் குமாரின் இந்த முயற்சியால் சுமார் 1,200 குரங்குகளுக்கு நல்ல உணவு கிடைக்கும் என கூறப்படுகிறது.