தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 93 மி.மீ. மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, ஆங்காங்கே பெய்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தூத்துக்குடி நகர் பகுதியில் இரவு 10 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
மேலும், திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவில்பட்டியில் இரவிலும் அதிகாலையிலும் சுமாரான மழை பெய்தது. இதனால்மின்தடை ஏற்பட்டது. 4 மணி நேரத்துக்ம் மேலாக மின்சார சப்ளை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். கடம்பூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இரவு முழுக்க கனமழை பெய்தது.இதனால் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. கயத்தாரிலும் மழை வெளுத்து வாங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் (மிமீ): வருமாறு:-
தூத்துக்குடியில் 20, ஸ்ரீவைகுண்டம் 64, திருச்செந்தூர் 55, காயல்பட்டினம் 93, குலசேகரபட்டினம் 18, சாத்தான்குளம் 26, கோவில்பட்டி 8, கழுகுமலை 14, கயத்தார் 67, கடம்பூர் 40, எட்டயபுரம் 5.20, விளாத்திகுளம் 20, சூரங்குடி 6, ஓட்டப்பிடாரம் 46, மணியாச்சி 65, வேடநத்தம் 26, கீழ அரசரடி 10 என மாவட்டத்தில் மொத்தம் 583.20 மிமீ மழை பெய்துள்ளது.