கார்‌ பந்தயம் நடத்துவதை விட்டுவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்தவேண்டும்-டி.ஜெயக்குமார்

 கார்‌ பந்தயம் நடத்துவதை விட்டுவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்தவேண்டும்-டி.ஜெயக்குமார்

அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-

கார்ப்பரேட் திமுக அரசே! எத்தனையோ இளைஞர்கள் சரியான உணவின்றி விளையாட இடமின்றி எத்தனையோ இடையூறுகளை கடந்து விளையாட்டுத்துறையின் மூலம் வெளிச்சத்திற்கு வர வெம்பாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர்!

விளையாட்டிற்கான உடற்தகுதி இல்லாமல் வாய்ப்புகளை இழந்தோர் ஏராளம்! சாதாரண சாப்பாட்டிற்கே வழி இல்லாத விளையாட்டு வீரர்கள் எங்கிருந்து புரதம்(Protein) நிறைந்த உணவெல்லாம் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்?

கடந்த ஆண்டே கார் ரேஸ் நடத்த திட்டமிட்டு மக்கள் பணத்தை வீணடித்தது இந்த விளம்பர அரசு! நடக்காமல் போன கார் பந்தயத்தை நடத்தியே தீருவேன் என சபதம் எடுத்துள்ளார் உதயநிதி.

 இம்முறை மக்களிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்பதற்காக தனியார் கம்பெனிகளின் ஸ்பான்சரில் நடக்கிறது என சப்பை கட்டு கட்டுகிறார் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி.

அந்த கம்பெனிகள் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் விளையாடும் விளையாட்டுகளுக்கு எல்லாம்‌ நிதியுதவி அளிக்காதா? தனியார் கம்பெனிகளிடம் இருந்து பிச்சை எடுத்து அரசாங்கத்திற்கு கார் ரேஸ் நடத்த வேண்டிய அவசியம் என்ன? இதனால் யாருக்கு பயன்?

ஏற்கனவே மாநகரில் நடக்கும் பைக் ரேஸ்-ஆட்டோ ரேஸ் உள்ளிட்டவற்றால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எத்தனை பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கார் பந்தயத்தில் கலந்து கொள்கிறார்கள்? தற்போது மழைக்காலத்தில் மழை நீர் வடிகால் பணிகளை கவனிக்க வேண்டிய ஒட்டுமொத்த மாநகராட்சி நிர்வாகமும் கார் பந்தய ஏற்பாடுகளை பல மாதமாக கவனித்து வருகிறது.

மாநகராட்சி நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் மக்களுக்கானதா? கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானதா? கார்ப்பரேட் திமுக அரசே! கார்‌ பந்தயம் நடத்துவதை விட்டுவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்து!

இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *