உதயநிதி ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் ஆவார் – அமைச்சர் மூர்த்தி
மதுரை லேடி டோக் கல்லூரியில் கல்வி கடன் மேளா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வணிகவரித்துறையில் சில நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நிறுவனங்களின் ஜி.எஸ்.டி. எண்ணை மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். அவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். யாரெல்லாம் தொழிலை செய்யாமல் ஜி.எஸ்.டி. நம்பர் வாங்கி வைத்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆண்டை விட வணிக வரித்துறையில் 4,000 கோடி ரூபாய் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளது. வணிக வரித்துறையில் இந்த ஆண்டு இலக்காக ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் கோடி பதிவுத்துறைக்கு 23 ஆயிரம் கோடி என்று வைத்திருக்கிறோம். எங்களுடைய அரசின் கோரிக்கை என்னவென்றால் நியாயமாக தொழில் செய்யுங்கள். மக்களிடம் வாங்கும் ஜி.எஸ்.டி. வரியை அரசிடம் செலுத்துங்கள் என்பதே ஆகும்.
நேர்மையாக செய்பவர்களுக்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் இருக்கும்.
மேலும் கல்விக்கடனை வங்கிகள் அதிகமாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறோம். வெகு விரைவில் எதிர்பாருங்கள் துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் ஆவார். அடுத்த மாதம் 9-ந்தேதி மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெறும். அதில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.