கஷ்டங்கள் போக்கும் செவ்வாய்க்கிழமை தூபம் …
நாம் கோவில்களில் சாமி கும்பிடும் போது கடவுளுக்கு தூபம் காட்டுவதை பார்த்திருப்போம். மேலும் வீடுகளிலும் தூபம் போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இந்து சாஸ்திரத்தில் மட்டுமல்லாமல் வேறு சில மதங்களிலும் தூபம் போடும் வழக்கம் உள்ளது.
அவ்வாறு தூபம் போடும் போது நம்மிடம் உள்ள கெட்ட திருஷ்டிகள் விலகி நேர்மறையான சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் ஆன்மீக ரீதியாக இந்துக்களுக்கு சில கிழமைகள் முக்கியமான கிழமைகளாக பார்க்கப்படுவதுண்டு.
அதில் செவ்வாய், வெள்ளி இந்த இரு கிழமைகளும் தூபம் போடுவதற்கு சிறந்த கிழமைகள் ஆகும். ஒரு சிலர் வெள்ளி, செவ்வாய் அன்று வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். மேலும் தூபம் போடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் செவ்வாய்க்கிழமை அன்று நாம் போடும் தூபமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மகிஷாஷி தூபம் போடுவதால் பல நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை. நாம் இந்த பதிவில் செவ்வாய்க்கிழமை அன்று மகிஷாஷி தூபம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி காண்போம்.
மகிஷாஷி மற்ற தூபங்கள் போல் இல்லாமல் சக்தி வாய்ந்த தூபமாக பார்க்கப்படுகிறது. மகிஷாஷி தூபம், குங்கிலியம், பால் சாம்பிராணி ஆகியவற்றை சேர்த்து செவ்வாய் கிழமை தூபம் போட்டு வந்தால் தீய சக்திகள் விலகி நேர்மறையான சக்திகள் கிடைக்கும்.
மேலும் இந்த தூபம் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் தான் போட வேண்டும். வீட்டில் மகிஷாஷி தூபம் போடும் போது பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகும். மேலும் தொழில் செய்யும் இடத்தில் மகிஷாஷி தூபம் போடும் போது தொழிலில் ஏற்பட்ட கண் திருஷ்டி விலகும்.
முதலில் வீட்டிற்குள் தான் தூபம் போட வேண்டும். அதன் பிறகு தான் வெளியில் தூபம் காட்ட வேண்டும்.
இந்த தூபம் போடுவதால் இதுவரை வீட்டில் இருந்து வந்த பீடை நீங்கும். வீட்டில் லட்சுமி கடாக்ஷம் கிடைக்கும்.
பலருக்கும் எந்த காரியமும் நடக்காமல் எது செய்ய நினைத்தாலும் அதில் பல தடைகள் ஏற்படும். இதற்கு காரணம் நம் எண்ணங்கள் தான். நம்மை சுற்றி எதிர்மறை ஆற்றல் இருந்தால் நம்மால் எதையும் சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் செய்ய முடியாது. எனவே இந்த மகிஷாஷி தூபம் போடும் போது நம்மை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல் விலகி, நேர்மறை ஆற்றல் கொடுக்கும்.
நெருப்பில் மகிஷாஷி தூபம் போடும் போது சிறிது நேரம் வெடிக்கும். எனவே சற்று கவனமாக இந்த தூபம் போட வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் ‘மகிஷாஷி வஸ்து’ என கேட்டால் காெடுப்பார்கள். அதனை வாங்கி வந்து துர்க்கைக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை இராகு காலத்தில் தான் போட வேண்டும். மற்ற கிழமைகளில், பூஜை நாட்களில் இந்த வஸ்தை பயன்படுத்த வேண்டாம்.
மேலும் பலருக்கும் இதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த தூபம் போடும் போது நம்மிடம் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகி, ஒரு வகையான நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.