அயலக தமிழ் இளைஞர்கள் 100 பேரின் தமிழக சுற்றுப்பயணம்; ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டின் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் “வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ், தென் ஆப்பிரிக்கா, உகாண்டா, குவாடலூப், மார்டினிக், பிஜி, இந்தோனேஷியா, மொரிஷியஸ், ஆஸ்திரேலியா, மாலத்தீவு கனடா, மியான்மர், மலேசியா, இலங்கை. பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் தமிழ்நாடு வந்துள்ளனர்.
அவர்கள் நேற்று தங்கள் தமிழ்நாடு சுற்றுபப்யணத்தை தொடங்கினர். வருகிற 15-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்கிறார்கள். பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் பண்பாட்டுப் பயணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சுற்றுப் பயணத்திற்கு துணிமணிகள், பயண குறிப்புகள், புத்தகங்கள், அடையாள அட்டை போன்ற பயணத்திற்கான பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான், தலைமைச் செயலாளர். சிவ் தாஸ் மீனா, வளர்ச்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை இணைச் செயலாளர் பா. விஷ்ணு சந்திரன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் பா. கிருஷ்ணமூர்த்தி, உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கல்வி பொறுப்பாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.