60 வயது விவசாயிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்; கோவில்பட்டி மாநாட்டில் வலியுறுத்தல்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் விவசாயிகள் கோரிக்கை மாநாடு நேற்று கோவில்பட்டியில் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அ.லெனின் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.குருசாமி, வி.கணேசமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் ஆர்.முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, மாநில துணைச் செயலாளர் எஸ்.நல்லையா, திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பி.கரும்பன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
* எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.
*2022-23-ம் ஆண்டு காப்பீடு செய்த விடுபட்ட விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
*2023 டிசம்பரில் செய்த கனமழையில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நில அளவீடு செய்து சீர்படுத்த நிவாரணம் வழங்க வேண்டும்.
*மழையில் சேதமடைந்த ஏரி, கண்மாய், குளங்களை உடனடியாக செப்பனிட வேண்டும்.
*பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்த தகுதி உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனையின்றி நிதி வழங்க வேண்டும். *2023-ல் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
* 2023 – 24-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.
*மழை வெள்ளத்தால் உயிர் சேதமடைந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
*60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
மேற்கண்டவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் வி.பாலமுருகன், நகரச் செயலாளர் அ.சரோஜா, விவசாயிகள் சங்க தாலுகா தலைவர்கள் டி.வேலுச்சாமி, கே.சந்திரமோகன், பி.கிருஷ்ணமூர்த்தி, தாலுகா செயலாளர்கள் ஆர்.ரவீந்திரன், ஏ.வேலாயுதம், ஏ.அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.