வயநாட்டில் நிலச்சரிவு; 3 கிராமங்கள் புதைந்தன- 70 பேர் பலி

 வயநாட்டில் நிலச்சரிவு; 3 கிராமங்கள் புதைந்தன- 70 பேர் பலி

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மிகக் கனமழை பெய்தது.

இந்த கனமழையை தொடர்ந்து நேற்று அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் முண்டக்கை, சூரல்மலை,வைத்திரி ஆகிய 3 கிராமங்கள் புதைந்தன. பெருமழை காரணமாக சாழியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது அட்டமலையில் இருந்து முண்டகை பகுதியை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதனால், தனித்தீவில் சிக்கியது போல 500 வீடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக்கொண்டனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை  70ஆகஉயர்ந்துள்ளது                                                                                                                                  பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பலரின் நிலை என்னவென்று தெரியாததால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட உடன் உடனடியாக ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. இதனையடுத்து காலாட்படை பட்டாலியனைச் சேர்ந்த 225 பேர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மருத்துவ அதிகாரிகள் குழு தலைமையில், 40 பேர் அடங்கிய குழுவினர் மீட்பு பணிக்கு உதவுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்

குன்னூர் கண்டோன்மென்டில் இருந்தும் இரண்டு குழுவினர் வயநாடு விரைந்து உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர் விமானப்படைக்கு சொந்தமான ஏஎல்எச் மற்றும் எம்ஐஐ 7 ஹெலிகாப்டர்களும், சாரங் வகை ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் முன்னின்று உதவி செய்தன.

 நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு படையினர், வனத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் இணைந்து ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் முகாம்களில் தங்க வைக்க்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக தகவல்களை பெற விரும்புவோருக்கு வசதியாக கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 96569 38683 மற்றும் 8086010833 ஆகிய நம்பர்களில் தொடர்பு கொள்ளலாம்.

வயநாட்டில் மேக மூட்டத்துடன் வானம் காணப்படுவதால் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாமல் சில மணி நேரம் தவித்தன. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்க மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன.

நிலச்சரிவைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யபட்டுள்ளதாக கேரள முதல்-மந்திரி  பினராய் விஜயன் அறிவித்துள்ளார் இந்த நிலையில் கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *