கோவில்பட்டியில் புதிய முயற்சி: இளம் ஆக்கி கோல்கீப்பர்களுக்கு இலவச உபகரணங்களுடன் 3 வருட பயிற்சி
உலகில் ஆக்கிக்கு இந்தியா ஒரு தனி இடம் உண்டு அது போல இந்தியாவில் ஆக்கிக்கு கோவில்பட்டி முக்கிய பங்கு வகிக்கிறது
கோவில்பட்டியில் இருந்து நிறைய ஆக்கி வீரர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இன்னமும் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கோவில்பட்டியில் புதிய முயற்சியாக ஆசிய கண்டத்திலேயே முதல் முறையாக ஆக்கி கோல்கீப்பர்களுக்கு இலவசமாக விளையாட்டு உபகரணங்களை வழங்கி அவர்களுக்கு 3 வருடம் தொடர்ந்து பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
புதிதாக வளரும் கோல்கீப்பவர்களுக்காக ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பில் உருவாக்கப்பட்ட இந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற தமிழ் பொன்மொழிக்கு ஏற்றவாறு சிறு வயது முதலே ஆக்கி விளையாட்டில் கோல்கீப்பர்களுக்கு எல்லா நுணுக்கங்களையும் ஆக்கி விளையாட்டின் அவர்களுக்கு என்று இருக்கும் தனி சிறப்பையும் புரிய வைத்து அவர்களை 3 வருடம் தொடர்ந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி தொடக்க நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளர் ரோஸ் பாத்திமா மேரி தலைமை தாங்கினார், ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குருசித்ர சண்முக பாரதி, சர்வதேச ஆக்கி நடுவர் ஜான்பால் , ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் ராஜா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுரேந்திரன், சுரேஷ்குமார், தனசேகரன், வேல்முருகன், முகேஷ் குமார், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோல்கீப்பர் பயிற்சியாளர் சேலம் மாவட்டம் வேங்கி பாளையம் கிராமத்தை சேர்ந்த கதிரவன் 10 இளம் கோல் கீப்பர்களுக்கு தலா ரூ. 20000 மதிப்பிலான கோல்கீப்பர் உபகரணங்களை இலவசமாக வழங்கி வீரர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இந்த 10 பேருக்கான மொத்த பயிற்சி நாட்கள் 3 வருடங்கள். அதற்கு பிறகு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சி முகாமிற்கு அனுப்பப்படுவார்கள்.