• May 20, 2024

தடைகளை தாண்டி தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவோம்; தூத்துக்குடி விழாவில் பிரதமர் மோடி பேச்சு  

 தடைகளை தாண்டி தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவோம்; தூத்துக்குடி விழாவில் பிரதமர் மோடி பேச்சு  

2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி இன்று காலை மதுரையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தார். துறைமுக ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் ஹெலிகாப்டர் இறங்கியது.

அங்கு மத்திய இணைமந்திரி முருகன் பிரதமரை நேரில் வரவேற்றார். தமிழக அரசு சார்பில் அமைச்சர் கீதாஜீவன் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.

பின்னர் விழா நடந்த இடத்துக்கு சென்ற பிரதமர் மோடி விழாவில் பங்கேற்றார்.ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு உள் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.

மேலும் ரூ,4586 கோடி மதிப்பிலான தேசிய நெடுங்க்சாலைகள் நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது 10 மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா வசதிகளையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்கள் விவரம் வருமாறு:-

*கொச்சியில் நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் செல் உள்நாட்டு நீர்வழிக் கப்பல் போக்குவரத்து.

*திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல். குலசேகரப்பட்டினம் ஏவுதளம் ஆண்டிற்கு 24 ராக்கெட்டுகளை விண்ணிற்கு அனுப்பும் திறனுடையது.

*தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிதுறைமுக சரக்கு பெட்டக முனையம்.

*ரூ.124.32 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.

*ரூ.7,055 கோடியில் வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல்.

*மீன்சுருட்டி-சிதம்பரம் இருவழிப்பாதை, ஒட்டன்சத்திரம்- மடத்துக்குளம் 4வழிச்சாலை

*நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பிரிவின் இருவழிப் பாதை, ஜித்தண்டஹள்ளி-தருமபுரி 4வழிச்சாலை

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. இந்த திட்டங்களால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தூத்துக்குடியை கப்பல் போக்குவரத்து மையமாக மாற்ற, அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய வரைபடத்தின் வளர்ச்சியில் முன்னேற்றத்தின் எடுத்துக்காட்டு இன்றைய நிகழ்வு.

தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகள், கனவுகளை இன்று நனவாக்கியுள்ளோம். 75 கலங்கரை விளக்கங்களை மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளங்களாக மாற்றும் பெருமை எனக்கு கிடைத்துள்ளது.

மத்திய அரசின் பங்களிப்பால் கடல்வழி, நீர்வழி போக்குவரத்தில் தலைசிறந்து விளங்குகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து 35% அதிகரித்துள்ளது. உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தில் 8% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது

மத்திய அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 2,000 கி.மீ தூர ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன;. 5 வந்தே பாரத் ரெயில்கள்  இயக்கப்படுகின்றன.

நான் தெரிவிக்கும் கருத்துகள் அரசியல் கட்சிகளின் சித்தாந்தமே தவிர, எனது தனிப்பட்ட கருத்துகள் கிடையாது.

தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், வளர்ச்சி குறித்த எனது கோட்பாட்டையும், செய்தித்தாள்களில் தமிழ்நாடு அரசு வெளியிடவிடுவதில்லை. தடைகளைத் தாண்டி தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவோம்-

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை மந்திரி எல்.முருகன், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனனர். முன்னதாக பிரதமர் மோடியை இஸ்ரோ தலைவர் சோம்நாத், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உள்ளிட்டோர் வரவேற்றனர். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *